கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் குறைந்தது ஒரு வாரத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிக சார்பில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தும், தேமுதிக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கியும், மருத்துவ முகாம்களை அமைத்தும், குடிநீர் வழங்கியும் பாதிக்கப்பட்டவர்களுடன் உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்கள்.
நேரில் பார்வையிட்டபொழுது மின்சாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு, மக்கள் குடிநீருக்கு கூட தவிக்கின்ற நிலைமையை அறிந்தோம். நெடுஞ்சாலை பிரிவை தாண்டி கிராமத்தின் உள்பகுதிகள் முழுவதுமாக பாதிக்கப்படிருக்கிறது.
அதில் குடிசைகள், ஓட்டுவீடுகள் புயல் காற்றினால் தூக்கிஎறியப்பட்டு, அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகிருக்கிறது. விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரங்களான தென்னை மரம், வாழை மரம், நெற் பயிர்கள் முற்றிலும் அழிந்து போயிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு தனி முகாம்கள் அமைக்காமல் பள்ளிக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இயல்பு வாழ்க்கை முழுவதுமாக திரும்பி இருக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குவதற்கு பள்ளிகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
நிலைமையை சீர்செய்யும் முன் பள்ளிகளை திறப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு பள்ளிகளை திறக்கவேண்டும். எனவே ஒருவார காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை தேமுதிக வலியுறுத்துகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை பிறமாவட்டங்களில் இருந்து பணியாளர்களை அழைத்து போர்கால அடிப்படையில் உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும். மின்சாரம் சீர்செய்யப்படும் வரை ஜெனரேட்டர் போன்ற உதவிகளால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
தமிழக அரசு அறிவித்த ஆயிரம் கோடி நிவாரண உதவியை இடைத்தரகர்கள் இடையூறு இல்லாமல் மக்களுக்கு நேரடியாக, காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர் முதல் மாவட்ட அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களின் அலட்சியப் போக்கால் மக்கள் சாலையில் வாழ்கின்றதை கேட்கும்பொழுது மனது மிகவும் வேதனை அடைகிறது.
இந்நிலையில் அரசியல் பாகுபாடின்றி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அவரவர்கள் முடிந்த உதவிகளை செய்யவேண்டுமென தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசு உடனடியாக பார்வையிட்டு தகுந்த உதவிகளை உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசு அதற்குண்டான பணிகளை உடனே செய்யவேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன். மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சியாளர்கள் தங்களை யாரும் சந்திக்கவில்லை என்று பெரும் ஆவேசத்தை காட்டியிருக்கிறார்கள். அதனால் மாவட்ட ஆட்சியருடன், அதிகாரிகள், அந்தந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் பொதுமக்களை நேரில் அணுகி அவர்களுடைய குறையை தீர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் மக்களும் தங்களுடைய ஆவேச உணர்வுகளை மறந்து, வன்முறைக்கு இடம்கொடுக்காமல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இன்றைக்கு மக்களின் அத்தியாவசிய தேவையான மண்ணெண்னை, குடிநீர், மின்சாரம் போன்றவைகளை போர்கால அடிப்படையில் செய்திடவேண்டும். தமிழகத்திலேயே டெல்டா மாவட்ட மக்கள் அகதிகள் போல் வாழ்கின்ற நிலைமை போர்கால அடிப்படையில் மாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.