நாகையில் அமைச்சர் ஓ.எஸ் மணியனை கத்தியால் குத்த முயன்ற இளைஞரால் பரபரப்பு!
வேதாரண்யம் பகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார் தினகரன். ‘ எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்’ என தினகரன் கூறினாலும், ‘கட்சி நிர்வாகிகள்தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். தினகரனால் எந்த லாபமும் இல்லை’ என கொதிக்கின்றனர் அமமுக தொண்டர்கள்.
காவிரி டெல்டா பகுதிகளை குறிவைத்து தினகரன் அரசியல் செய்து வந்தாலும், புயலால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவி செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வைத்திலிங்கம் ஆகியோருக்குக் கிடைத்த ‘வரவேற்புகள்’ ஆளும்கட்சிக்கு மட்டுமல்ல, தினகரன் தரப்பினருக்கே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுதான் பிரதான காரணம்.
எதிர்க்கட்சியான தி.மு.க, புயல் பாதித்த பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அறக்கட்டளையில் இருந்தும் ஒரு கோடி ரூபாயை ஒதுக்கிருக்கிறது திமுக.
ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு ரூபாயைக்கூட நிவாரணமாக தினகரன் அறிவிக்கவில்லை. இது அமமுக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இதுதொடர்பாக பேசும் தினகரன் கட்சி நிர்வாகிகள், ‘ அமமுகவில் சேர்ந்தது முதல் இப்போது வரையில் நாங்கள்தான் செலவு செய்து வருகிறோம். பொதுக்கூட்டம் உள்பட எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தினகரனிடம் பணத்தை எதிர்பார்க்க முடியாது.
டெல்டா பகுதிகளில் பத்து லட்சம் செலவு செய்து கூட்டம் போடுவோம். தினகரன் தரப்பில் இருந்து ஒரு லட்ச ரூபாயைக் கொடுப்பார்கள். இவ்வளவு செலவு செய்த பிறகு அவர் கொடுக்கும் அந்த ஒரு லட்சத்தை வாங்கினால் மரியாதையாக இருக்காது என அந்தப் பணத்தையும் மறுத்துவிடுவோம்.
தற்போது கஜா புயலால் கொடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது காவிரி டெல்டா.
இந்தப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களில் கணிசமானவர்கள் தினகரனுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள். இந்த மக்களுக்காக நேரடியாகக் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் டி.டி.வி.
ஆனால், ஒரு சில இடங்களில் மட்டுமே ஆய்வு நடத்துகிறார். கேட்டால், ஒரத்தநாட்டில் சிக்கிக் கொண்டார், இந்தப் பாதை வழியாக வர முடியவில்லை எனச் சொல்கின்றனர். இதையெல்லாம் ஏற்கும்படியாக இல்லை. ‘வைத்திக்கும் மணியனுக்கும் கிடைக்கும் வரவேற்பு தனக்கும் வந்துவிடக் கூடாது’ என்ற அச்சம்தான் காரணம்.
இந்த நிமிடம் வரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய அளவில் அவர் எந்த உதவிகளும் செய்யவில்லை. பொருளாதாரரீதியாக சிரமத்தில் இருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். மிகுந்த வசதியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களால் கட்சிக்காரர்களுக்கும் லாபமில்லை. மக்களுக்கும் லாபமில்லை’ என்கின்றனர்.
- அருள் திலீபன்