சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது உண்மையில் நாய் கறிதானா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ரயில்வே போலீசார் ஜோத்பூர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 17ம் தேதி ரயிலில் இருந்து சுமார் 21 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில், இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெட்டிகளை சோதனை செய்தபோது, அதனுள் 1800 கிலோ நாய்கறி இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இறைச்சியை மண்ணில் புதைத்து அழித்தனர்.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்டது நாய் இறைச்சி இல்லை என்றும் அது ஆட்டிறைச்சி தான் என்றும் கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளின் வால்கள் ஒரு அடி வரை வளரக்கூடியவையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஆடுகளின் வால்கள் மிகவும் சிறியதாக இருக்கும். விலை குறைவு என்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்த நீளமான வால்களை உடைய ஆட்டுக்கறியை இங்குள்ள வியாபாரிகள் வாங்கி அதனை சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் சந்தேகத்தின் பேரில் இறைச்சியை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், சென்னையில் பிடிபட்டது உண்மையில் நாய்கறி தானா என்ற சந்தேகத்தில் ரயில்வே போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு விரைந்துள்ளனர்.
மொத்தம் 15 ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் ராஜஸ்தானுக்கு விரைந்துள்ளனர். இதன்மூலம், இறைச்சியை அனுப்பியாது யார் ? அனுப்பியது ஆட்டிறைச்சியா அல்லது நாய் இறைச்சியா என்பது குறித்தும் விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.