திமுக, தினகரனுக்கு செக் வைக்க அனைத்து வங்கிக் கணக்குக்கும் பணம்! - எடப்பாடியின் அடடே டெல்டா பிளான் Exclusive

AIADMK to deposit relief fund in bank accounts

Nov 21, 2018, 12:49 PM IST

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. 20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், புயல் நிவாரண நிதியின் மூலம் அரசுக்கு சாதகமாகத் திருப்பும் வேலைகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

டெல்டா மாவட்டங்களில் கஜா ஏற்படுத்திய சேதத்தை அவ்வளவு எளிதில் ஈடுகட்டிவிட முடியாது. பல கிராமங்களில் மின்சார வசதி திரும்புவதற்கே மூன்று மாதங்கள் ஆகிவிடும் எனக் கூறுகின்றனர்.

உயிர்ப் பலிகள், பயிர் பாதிப்பு, தென்னை, வாழை மரங்களின் சேதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசு தற்போது ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தாலும், கூடுதல் நிதிக்காக பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

" புயலின் சேத மதிப்பீட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு கூடுதல் நிதி அளித்தால், அதன்மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என நினைக்கிறார் முதலமைச்சர்" எனக் கூறும் அதிமுக நிர்வாகிகள், " கொங்கு பெல்ட்டில் அதீத செல்வாக்கோடு வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தினகரனின் ஆதிக்கத்தால் காவிரி டெல்டா பகுதிகளில் அதிமுகவுக்குச் சேதாரம் ஏற்படுகிறது.

இங்குள்ள பல அமைச்சர்களை மக்கள் விரட்டியடிக்கின்றனர். சுவர் ஏறிக் குதித்துத் தப்பியோடும் நிலையில் அமைச்சர்கள் உள்ளனர். இதனை அமமுகவினர் தங்களுக்குச் சாதகமாகப் பார்க்கின்றனர்.

மக்களின் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் நிவாரணத் தொகையை வாரியிறைத்தால் மட்டுமே முடியும். இதை உணர்ந்து இறப்புக்குப் பத்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதீத பாதிப்பு முதல் மிகச் சாதாரண பாதிப்பு வரையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் வெள்ள பாதிப்பு வந்தபோது, பொதுமக்களின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும்கூட மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.

இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் தேதி கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அந்த விதிகளை மீறி, தற்போது தமிழகத்தில் வெள்ள நிவாரண நிதி, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் தொகுதியைச் சேர்ந்த வசந்தி என்ற பெண்ணின் வங்கிக்கணக்குக்கு ரூ.5ஆயிரம் கடந்த 9-ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது. இது அதிமுக அரசுக்கு சாதகமாக அமையும். எனவே, மாநிலம் முழுவதும் இது போல் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுவதை தடுக்க வேண்டும். மாநில அரசுக்கும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்த வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவின் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தற்போது திமுக பிரதிநிதிகள் கஜா பாதித்த பகுதிகளில் நல்ல பெயர் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனை முறியடிக்கும் வகையிலும் தினகரனின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் வகையிலும் பொதுமக்களுக்குப் பணம் வாரிவழங்கப்பட உள்ளது. இதன்மூலம், தஞ்சை, திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நம்புகிறார் முதலமைச்சர்" என்றனர் விரிவாக.

- அருள் திலீபன்

You'r reading திமுக, தினகரனுக்கு செக் வைக்க அனைத்து வங்கிக் கணக்குக்கும் பணம்! - எடப்பாடியின் அடடே டெல்டா பிளான் Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை