அதிமுக பாணியில் திமுகவினரும் ஸ்டிக்கர் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சென்ற நிவாரணப் பணிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ள பாதிப்பின்போது, வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான நிவாரணப் பொருட்கள் வந்து சேர்ந்தன. அந்தப் பொருட்களில் எல்லாம் ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த வாகனங்களில் வலுக்கட்டாயமாகவும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டமும் நடந்தன. ஸ்டிக்கர் அரசு என ஜெயலலிதாவுக்குக் கெட்ட பெயரும் ஏற்பட்டது.
தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இதற்காக திமுக அறக்கட்டளையில் இருந்து ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார் ஸ்டாலின்.
சீருடை அணியாத ராணுவமாகக் களத்துக்கு வாருங்கள் என கட்சிக்காரர்களுக்கும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கிடையில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சேமியா, குடிநீர் பாட்டில் என பண்டல் பண்டலாகப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளனர். அதில் ஒவ்வொன்றிலும் கருணாநிதி, ஸ்டாலின் படங்களை ஒட்டியுள்ளனர்.
அண்ணா அறிவாலயத்தில் இருந்து நிவாரணப் பொருள்களை அனுப்பியபோது, அதில் எந்த ஸ்டிக்கர்களும் ஒட்டப்படவில்லை. மாவட்டங்களில் மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது தமிழக அரசு அனுப்பி வரும் நிவாரணப் பைகளில் ஜெயலலிதா, எடப்பாடி படங்கள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே பாணியில் திமுகவினரும் செயல்படுவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
- அருள் திலீபன்