ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

MK Stalin condemned Jammu and Kashmir state assembly dissolution

by Isaivaani, Nov 22, 2018, 20:22 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் மாண்புமிகு சத்யபால் மாலிக் அரசியல் சட்டவிரோத நடவடிக்கை அரங்கேற்றியுள்ளதாக கூறி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் மாண்புமிகு சத்யபால் மாலிக் அவர்கள் அரங்கேற்றியிருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி அவர்கள் ஆளுநருக்கு கடிதம் கொடுத்தவுடன், அவரை ஆட்சியமைக்க அழைப்பதற்குப் பதில், இந்த ஜனநாயப் படுகொலையை நடத்தி முடித்திருக்கிறார் அம்மாநில ஆளுநர்.

“மாற்று சித்தாந்தம் உடைய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைக்க முடியாது” என்று ஆளுநர் ராஜ்பவனில் அமர்ந்தவாறே தன்னிச்சையாக முடிவு செய்து அந்த சட்டமன்றத்தைக் கலைத்திருப்பது, உச்சநீதிமன்றம் எஸ்.ஆர்.

பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பிற்கும் நேர் எதிரானது. மத்திய-மாநில அரசு உறவுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அளித்த பரிந்துரைகளுக்கு விரோதமானது. அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ஒரு ஆளுநரே அந்த சட்டத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அதைப் பலியிட்டிருப்பது, ஜனநாயக நாட்டில் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல; கேலிக் கூத்தாகவும் ஆகிவிடும். தனிப் பெரும்பான்மையுள்ள கட்சியோ அல்லது அந்த பெரும்பான்மைக்குத் தேவையான மற்ற கட்சிகளின் ஆதரவினைப் பெற்றோ ஆட்சி அமைக்க ஒரு கட்சி உரிமை கோரும் போது, அந்த உரிமையை வழங்கி, சட்டமன்றத்தில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிடுவதுதான், பொறுப்புள்ள ஒரு மாநில ஆளுநர் செய்ய வேண்டிய ஜனநாயக ரீதியான பணி.

ஆனால் அந்தக் கட்சிகள் அனைத்தும் ஒரே கொள்கை உடைய கட்சிகளா என்று அரசியல் அடிப்படையில் பரிசீலிப்பது நிச்சயமாக ஆளுநரின் வேலை அல்ல! சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய பெரும்பான்மை பலத்தை ஒரு காலத்திலும் ராஜ்பவனில் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அதை எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. ராஜ்பவன் எந்நாளும் சட்டமன்றமாக ஆகிவிடமுடியாது..

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் மதசார்பற்ற ஆட்சி அமைவதைத் தடுக்கும் பொருட்டு, பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்பட்ட அம்மாநில ஆளுநரின் நடவடிக்கை மீது உச்சநீதிமன்றமே குட்டு வைத்த பிறகும், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் போன்ற பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்ட ஏஜன்ட்டுகளான ஆளுநர்கள் திருந்துவதாக இல்லை; பாஜகவின் விசுவாசிகளாக இருப்பதிலேயே மனநிறைவு கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பான்மை இல்லாத அதிமுக ஆட்சியை, அடுத்தடுத்து தமிழ்நாட்டில் பதவியேற்ற ஆளுநர்கள் மத்திய பாஜகவின் கட்டளை கேட்டு, இப்படித்தான் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அனுமதித்தார்கள். அதன் விளைவு இன்றைக்கு ஒட்டுமொத்த மாநில நிர்வாகமும் ஒரே ஊழல் மயமாகி, “கமிஷன், கரெப்ஷன், கலெகஷன்” என்ற கேவலமான நிலை ஏற்பட்டு, கஜா பேரிடர் போன்ற நெருக்கடியான நேரத்தில்கூட உரிய நிவாரணம் கிடைக்காமல் மக்கள் ஆறு நாட்களுக்கும் மேலாக இருட்டில் இடருற்று அவதிப்படுகிறார்கள் என்றால் பொறுப்பற்ற, பெரும்பான்மையற்ற அதிமுக ஆட்சி தமிழகத்தில் நீடிப்பதுதான் முக்கியக் காரணம்.

இதற்கு அரசியல் சட்டத்தை வளைத்துள்ள ஆளுநர்களும் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேபோன்று நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய மாநிலமாகத் திகழும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையை ஒரு ஆளுநரே உருவாக்கியிருக்கிறார் என்பது வேலியே பயிரை மேய்வதைப் போலாகியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் “பா.ஜ.க.வின் சட்டமல்லாத சட்டத்திற்கு”ப்பணிந்து, “அரசியல் சட்டத்தை” ஜனநாயக அக்கறை சிறிதுமின்றி காவு கொடுக்கும் ஆளுநர்களால் நாட்டில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

“அரசியல் சட்டத்தின்படி நடக்க ஆளுநர்கள் தயாராக இல்லை” என்ற போக்கு நீடிப்பது நாட்டின் சட்டமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதும் அல்ல;. மத்திய மாநில உறவுகளுக்கு உகந்த நிலையும் அல்ல. ஆகவே அரசியல் சட்டத்தின்படி நீடிக்கும் ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்களின் தகுதிகள் குறித்து சர்க்காரியா கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளையும் தாண்டி ஆலோசிக்க வேண்டிய தருணமும் கட்டாயமும் வந்து விட்டதாகவே கருதுகிறேன்.

ஆகவே ஆளுநர் நியமனம் மற்றும் அவர்களுக்கான தகுதிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பரிசீலித்து வரையறை செய்ய மீண்டும் ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

You'r reading ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் கலைப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை