சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மழை பெய்து வருவதால், மறுசீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அதற்காக, 15000 கோடி தேவை என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.
தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட் பகுதிகளை பார்வையிட மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இந்நிலையில், மத்திய குழு நேற்றிரவு சென்னை விரைந்தது. இந்த குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு, நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கால், விவசாய கூட்டுறவுத் துறை இயக்குனர் பி.கே.ஹவச்தவா, ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குனர் மானிக் சந்தரபண்டிட், மின்வாரிய முதன்மை என்ஜினீயர் வந்தனா சிங்கால், நீர்வளத்துறை இயக்குனர் ஹர்ஷா, நெடுஞ்சாலை, போக்குவரத்து கண்காணிப்பு என்ஜினீயர் இளவரசன் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, கஜா புயல் பாதிப்பு குறித்து வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களுடன் விளக்கப்பட்டது.
இதன்பிறகு, மத்திய குழுவினர் இரு பிரிவுகளாக பிரிந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கு பார்வையிட்டு வருகின்றனர். தொடர்ந்து, இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பார்வையிட்டு விசாரணை நடத்த உள்ளனர்.