சத்துணவுத் திட்டத்தில் ரூ.2400 கோடி ஊழல்- அமைச்சர்களை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்

MK Stalin demands to take action against Ministers in noon meal scam:

by Mathivanan, Nov 25, 2018, 14:47 PM IST

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழல் செய்த அமைச்சர்களை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2400 கோடி ரூபாய்வரை ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை சோதனைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் “மெகா ஊழல்” அதிர்ச்சியளிக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” என்று மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது துறை வாரியாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த ஊழல்கள் மூலம் கண்கூடாக நாட்டு மக்களுக்குத் தெரிகிறது.

சத்துணவுத்திட்டத்தை உண்மையிலேயே “சத்து” உள்ள திட்டமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கருணாநிதி ஆட்சியிலிருந்த போது முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதுமட்டுமல்ல, கழக ஆட்சி இருந்தவரை பள்ளிகளில் முட்டை வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாகவும் முறையாகவும் நேர்மையுடனும் செயல்படுத்தப்பட்டது.

குழந்தைகளின் உடல்நலன், கல்வி மற்றும் அவர்களின் எதிர்கால முன்னேற்றம் தொடர்பான இந்தத் திட்டத்திற்கு முட்டை வாங்குவதிலும் ஊழல் புரிந்து மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் புரிந்திருக்கும் அதிமுக அரசு, சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை விவாதித்து ஏற்கும் மனமில்லாமல் அவர்களை வீதிக்கு வந்து போராட வைத்து, ஒட்டுமொத்த சத்துணவுத் திட்டத்தையே சிதைத்துச் சீர்குலைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

முட்டை வழங்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமான வரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இலஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடைபெற்று தமிழகமே வெட்கித் தலை குனிந்து நிற்கிறது. இந்த ரகசியங்கள் அனைத்தும் அரசின் மூத்த அதிகாரிகளின் ஆதரவு மற்றும் துணையின்றி முட்டை நிறுவனத்திற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

மூத்த அதிகாரிகளோடு கைகோர்த்து அமைச்சர்களும் இதற்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

மக்கள் விரோத அதிமுக ஆட்சியில் முட்டை நிறுவனத்தில் நடைபெற்றது மட்டுமே முதல் வருமான வரித்துறை ரெய்டு அல்ல. இதற்கு முன்பு கரூர் அன்புநாதன், மணல் மாபியா சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத்துறை கான்டிராக்டர் செய்யாதுரை நாகராஜன், அமைச்சர் காமராஜின் உறவினர்கள் என்று பல்வேறு வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன.

ஆனால், எதிலும் இதுவரை பொதுமக்களின் கவனத்தில் வெளிச்சம் பாய்ச்சிடத் தக்க உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏன் குட்கா வழக்கில் வருமான வரித்துறையும், சி.பி.ஐ.யும் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தினாலும் “குட்கா” டைரியில் மாமூல் வாங்கியதாக பதிவுகள் இடம்பெற்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதோ, தமிழக டி.ஜி.பி. மீதோ இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

அதிமுக அமைச்சர்களை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு போர்த்திப் பாதுகாத்து வருகிறது என்பதுதான் இதுவரை உள்ள மிகுந்த அவலமான நிலைமை.

ஆகவே, இந்த வருமான வரித்துறை சோதனைகளின் நோக்கம் என்ன? ஊழல் தடுப்பா அல்லது அதிமுக அரசை தொடர்ந்து மிரட்டி மாநில உரிமைகளைப் பறிக்கவும், தமிழக நலனுக்கும் மக்களுக்கும் விரோதமான ஓர் ஆட்சியை நீடிக்க விட்டு, தங்கள் மதவாதம் உள்ளிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சியா? என்ற அய்யப்பாடு அனைவருக்கும் எழாமல் இல்லை.

அதிமுக அமைச்சர்கள் மீதும், அவர்களுக்கு வேண்டிய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் வருமான வரித்துறையின் நம்பகத்தன்மை மீது மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் உருவாகும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கி விட்டது. ஊழல் ஒழிப்பில் பா.ஜ.க. அரசின் “இரட்டை வேடம்” அதிமுக ஆட்சியில் நடைபெறும் சோதனைகளில் வெளியாகி நடுநிலையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.

ஆகவே, பள்ளிக்குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழலையும் மூடி மறைக்கவோ அல்லது அதிமுக அமைச்சர்களை எப்படியாவது தப்பிக்க வைக்கவோ மத்திய பா.ஜ.க. அரசு எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

2400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். அப்பாவிகள் மீது எதற்கு எடுத்தாலும் தேசத்துரோக வழக்குப் போடும் அதிமுக அரசு, தனியார் முட்டை நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்று கொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

You'r reading சத்துணவுத் திட்டத்தில் ரூ.2400 கோடி ஊழல்- அமைச்சர்களை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை