மீனவர்கள் அநாதைகளா?! - அமைச்சர் பேச்சால் வலுக்கும் எதிர்ப்பு - Exclusive

Protest against Tamil Nadu Information Technology Minister Manikantan speech

Nov 27, 2018, 13:30 PM IST

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத மணல் திருட்டுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் மீனவர்கள். இந்தச் சூழலில் மீனவர்களை அநாதைகள் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன்.

தமிழ்நாட்டில் மணலுக்கான டிமாண்ட் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை அறிந்து கடற்கரைப் பகுதிகளின் ஓரத்தில் இருக்கும் மணலைத் திருட்டுத்தனமாக அள்ளி வந்தனர் அமைச்சருக்கு வேண்டப்பட்ட சிலர். இதனைக் கண்டித்து மீனவர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக மணல் அள்ளுவதும் தடைபட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாம்பனில் நடந்த ஆட்டோ ஸ்டேண்ட் திறப்பு விழா நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார் அமைச்சர் மணிகண்டன். அப்போது, ' வானத்தில் இருந்தா மணல் கொட்டுகிறது. மணல் எடுத்தால் யாருக்கு என்ன பிரச்னை? இதற்குக் காரணமானவர்களை அவ்வளவு எளிதில் விட மாட்டேன்' எனக் கொதிப்போடு பேசியவர்,

மீனவர்கள் அநாதைகள் எனப் பொருள்படும்படி பேசிவிட்டார். இந்தப் பேச்சு ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் நிர்வாகி சின்னத்தம்பி, ' பாம்பன் நிகழ்ச்சியில் மீனவர்கள் அனாதைகள் என்று கூறி மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசிய அதிமுக அமைச்சர் மணிகண்டன், மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்களுக்கு மீனவர்கள் சார்பில் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்' எனத் தெரிவித்திருக்கிறார். ' மணல் அள்ளுவதில் லோடுக்கு இரண்டாயிரம் ரூபாய் அமைச்சர் தரப்புக்குச் சென்று கொண்டிருந்தது.

இதன்மூலம் வந்து கொண்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு, மீனவர்கள் தடை போட்டுவிட்டனர். அந்தக் கோபத்தைத்தான் பாம்பன் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் அமைச்சர்' என்கின்றனர் மீனவ பிரதிநிதிகள்.

-அருள் திலீபன்

You'r reading மீனவர்கள் அநாதைகளா?! - அமைச்சர் பேச்சால் வலுக்கும் எதிர்ப்பு - Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை