கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் கடும் சேதத்தை சந்தித்த நாகை மாவட்டத்தில் உள்ள பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் அவர்களுக்கு முதற்கட்டமாக நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: கஜா புயல் எதிரொலியால் நாகை மாவட்டத்தில் மட்டும் 15 பேர் பலியாகி உள்ளனர். அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை, 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளோம். மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.