ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் வரை வரும் 7-ந் தேதி முதல் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.
7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்காத ஆளுநர் பன்வாரிலால் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் மதிமுக ஒருங்கிணைத்த அனைத்து அரசியல் கட்சிகளின் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வேல்முருகன், 7 தமிழர் விடுதலைக்காக அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைப்படி வரும் 7-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தை நாங்கள் நடத்த இருக்கிறோம்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் பிரதமர் மோடி தமிழகம் வந்த போது எமது இயக்கத்தினர் தடைகளையும் தடுப்புகளையும் உடைத்துக் கொண்டு மோடிக்கு கறுப்பு கொடி காட்டியது போல ஆளுநர் மாளிகைக்குள் பாதுகாப்புகளை மீறி நுழைவோம். ஆளுநரின் காரின் குறுக்கே படுத்து தடுப்போம்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? என்றார்.