மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் தமிழக சட்டமன்ற கூட்டம் கூடுகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது இதற்காக, ரூ.5912 கோடி செலவில் அணையை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு குறித்த அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் அனுமதிகோரி தாக்கல் செய்தது.
அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சமர்ப்பிக்குமாறு கடந்த 22ம் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் டெல்லியில் நேற்று தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசு கேள்வி எழுப்பியது. மேலும், கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகள் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர்.
இதனிடையே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து வரும் 6ம் தேதி மாலை 4 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடுகிறது. இதுகுறித்த தகவலை சட்டமன்ற செயலாளர் அறிவித்துள்ளார்.