ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்காணித்து ஆய்வு செய்ய ஆறு பேர் கொண்ட குழுவை தேசிய விலங்குகள் நல வாரியம் நியமித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்திநாதன், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், காளைகள் துன்புறுத்தாத வண்ணம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது பின்பற்ற வேண்டிய 20 விதிகள் இணைக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணித்து ஆய்வு செய்ய, விலங்குகள் நல வாரிய முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு, ஜல்லிக்கட்டு போட்டிகளை புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக கால்நடைத்துறை செய்து கொடுக்க வேண்டும் எனவும் விலங்குகள் நல வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.