லோக்சபா தேர்தல் பணிகளுக்காக இரவு பகலாகச் சுற்றிச் சுழன்று வருகின்றனர் திமுக தொகுதி பொறுப்பாளர்கள். எப்படியாவது தொகுதியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக சிறிய சிறிய கட்சிகளுக்கும் வலைவீசிக் கொண்டிருக்கிறார்களாம்.கருணாநிதி மறைவுக்குப் பின்னர் தி.மு.கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் ஸ்டாலின். மாவட்டவாரியாக கட்சியை சீரமைக்கும் பணிகளையும் அவர் செய்து வருகிறார். வரப் போகிற லோக்சபா தேர்தலுக்காக தொகுதிக்கு இரண்டு பொறுப்பாளர்கள் என தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 80 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். 'அதே நேரத்தில் சில மாவட்டங்களில் உள்ள சின்னச் சின்ன கட்சிகளை முன்னிறுத்தவும் உள்ளார் தளபதி எனப் பேசும் திமுகவினர், ' கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்குச் சில கசப்பான அனுபவங்கள் வந்து சேர்ந்தன. அதனால பணத்தைக் கண்ணுல காட்டக் கூடாதுங்கறதுல ஸ்டாலின் உறுதியா இருக்கார்.
தென்மாவட்டங்களில் செல்வாக்கோடு இருக்கும் கோவை பிரமுகர் ஒருவர், கடந்தமுறை எங்கள் கூட்டணிக்குள் வந்து சேர்ந்தார். தொகுதி செலவுகளை நான் பார்த்துக்கறேன். எனக்கு மொத்தமா செட்டில் பண்ணுங்கன்னு ஒத்தக்கால்ல நின்னார்.
தளபதியும் கூட்டிக் கழிச்சுப் பார்த்து எட்டு கோடி ரூபாயைக் கொடுத்தார். மொத்தப் பணத்தையும் வாரி எடுத்துட்டுப் போனவர், தொகுதியில ஜெயிக்கல. அவர் கட்சி வேட்பாளரும் தோத்துட்டார். இந்தமுறை சில லெட்டர் பேடு கட்சிகள், எங்களுக்கு அவ்வளவு ஓட்டு இருக்கு..இவ்ளோ ஓட்டு இருக்குன்னு சொல்லிட்டு தலைமைக்கழகம் வந்துட்டுப் போறாங்க.
தென்மண்டல பிரமுகர் போலவே, சில சாதிக் கட்சிகள் கதவைத் தட்டத் தொடங்கிட்டாங்க. எங்களுக்கு இப்பவே செட்டில் பண்ணுங்க..சீனியர் மினிஸ்டர் பணத்தோட காத்துட்டு இருக்கார் என எச்சரிக்கையோடு பேசறாங்க. அவங்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாம, அமைதியா இருங்க...நாமதான் ஜெயிப்போம்னு சொல்லிட்டு இருக்கார் தளபதி.
இதுதான் சமயம்னு தொகுதியில செல்வாக்கு இருக்கற சாதி, சங்கக் கட்சிகள் எல்லாம் வரிசைக்கட்டி வந்துட்டிருக்காங்க. எல்லாருக்கும் கட்சிக்காரங்க பொறுமையா பதில் சொல்லிட்டு இருக்காங்க. தேர்தல் நெருக்கத்துலதான் யாரை வச்சிருக்கறது, வச்சிக்கக்கூடாதுன்னு தளபதி முடிவு செய்வார்' என்றனர் விளக்கமாக.
-அருள் திலீபன்