தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை டெல்லிக்கு வருமாறு ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவாரோ? என சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு காணப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் திருநாவுக்கரசர் தலைவராக இருப்பதில் திமுக தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.
தினகரன், ரஜினிகாந்துடன் நெருக்கம் காட்டி வருகிறார் திருநாவுக்கரசர். சசிகலா குடும்பத்துடனும் தொடர்பில் இருந்து வருகிறார். இதனால் திமுக தலைமை திருநாவுக்கரசரை நம்பாமல் புறக்கணித்தே வருகிறது.
இதேகாலகட்டத்தில் திருநாவுக்கரசருக்கு எதிராக ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பு போர்க்கொடி தூக்கி வருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் முகாமைச் சேர்ந்த நடிகை குஷ்பு, திருநாவுக்கரசர் குறித்த குற்றச்சாட்டுகளை ராகுலுக்கு தொடர்ந்து மெயிலில் அனுப்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் முடியும் வரை தலைமை மாற்றம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் யாரும் வெளியிடவும் வேண்டாம்; டெல்லிக்கு வரவும் வேண்டாம் என காங்கிரஸ் மேலிடம் கறாராக கூறிவிட்டது. இந்த நிலையில்தான் நேற்று திடீரென இளங்கோவனை டெல்லிக்கு வருமாறு ராகுல் காந்தி அழைத்துள்ளார்.
இது தொடர்பாக இளங்கோவன் ஆதரவாளர்களிடம் பேசுகையில், திருநாவுக்கரசர் மீது சொந்த கட்சியினருக்கும் நம்பிக்கை இல்லை; கூட்டணி கட்சியினருக்கும் நம்பிக்கை இல்லை.
ஏற்கனவே அறக்கட்டளை விவகாரங்களில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். 5 மாநில தேர்தலுக்காக அமைதியாக இருக்க வேண்டும் என்றது மேலிடம்,. நாங்களும் அமைதி காத்தோம்.
இப்போது மேலிடமே இளங்கோவனை அழைத்திருக்கிறது. அனேகமாக திருநாவுக்கரசருக்கு டெல்லி மேலிடம் கல்தா கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கண்சிமிட்டுகின்றனர்.
-எழில் பிரதீபன்