நெல் ஜெயராமன் மரணத்தில் சதியா? - பிலிப்பைன்ஸ் டூர் ஏற்படுத்திய பாதிப்பு

Controversy erupts over Nel Jayaraman Death

Dec 7, 2018, 16:15 PM IST

ஒருவகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் மரணமடைந்துவிட்டார். அவரது சொந்தக் கிராமத்தில் இன்று அடக்கமும் செய்யப்பட்டுவிட்டார்.

ஆனால், அவரது மரணம் இயற்கையானதா...சதியா என்ற பட்டிமன்றம் உருவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரம்பரியமான நெல் ரகங்களை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். சுமார் 171 வகையான நெல் ரகங்களை அவர் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். அவரது குடும்பத்தின் நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் உதவி செய்து வந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சென்னைக்கு அழைத்து வந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் உடல் நிலை நேற்று காலமானார்.

அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட்டது.

அவரைப் பற்றிப் பேசும் விவசாயப் பெருமக்கள், ` நம்மாழ்வாரின் வழியில் இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியவர் ஜெயராமன். பாரம்பரிய நெல் விதைகளான யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட பண்டைய கால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனை தனது பண்ணையில் விளைவித்தவர்.

இதனால் அவர் நெல் ஜெயராமன் என அழைக்கப்பட்டார். ஆண்டுக்கொரு முறை தனது கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்' என்றவர்கள்,

` கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவிதமான தோல் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோய் இயல்பாக ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஒருமுறை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு டூர் போனார். மான்சான்டோ ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அது. அப்போது உடல் நலமில்லாமல் அவதிப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

எனக்கு ஒன்னும் இல்லை என அவர் கூறியும் சிகிச்சை கொடுத்துள்ளனர். இதன்பிறகு ஊர் திரும்பியவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். பிலிப்பைன்ஸ் பயணத்தால்தான் இப்படி ஆனது எனப் பார்ப்பவர்களிடம் எல்லாம் பேசி வந்தார். அவரது மரணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்கின்றனர் அதிர்ச்சி மாறாமல்.

-அருள் திலீபன்

 

You'r reading நெல் ஜெயராமன் மரணத்தில் சதியா? - பிலிப்பைன்ஸ் டூர் ஏற்படுத்திய பாதிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை