தூத்துக்குடி ஸ்டைர்லைட் ஆலை மூடியதை குறித்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று அமர்வுக்கு வந்த நிலையில் வைகோ ஆஜாரானார்.
இதுகுறித்து தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நடைபெற்ற விசாரணையில், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிடுகையில், "ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் நாட்டுக்கே இழப்பு; 96 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும்தான் இந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றனர்" என்றார்.
உடனே வைகோ குறுக்கிட்டு, "நானும் அரசியல்வாதிதான். 22 ஆண்டுகளாக, சுற்றுச்சூழலையும், மக்களையும் பாதுகாக்கவே போராடுகின்றோம். அரசியலுக்காக அல்ல" என்றார்.
அதற்கு பதிலளித்த அரிமா சுந்தரம் "தொடர்ந்து நீங்கள் போராடி வருகின்றீர்கள். உங்கள் மீது நான் எந்தக் குறையும் சொல்லவில்லை" என்றார். இதையடுத்து,
தொடர்ந்து அவர் வாதிடுகையில், "2018 மே 22 ஆம் தேதி, தூத்துக்குடியில் பெரும் கிளர்ச்சி நடந்தது. வன்முறை ஏற்பட்டது. நக்சல்பாரிகளும் கலந்து கொண்டார்கள" என்றார். உடனே வைகோ குறுக்கிட்டு, "இல்லைவே இல்லை; இது பொதுமக்கள் போராட்டம். தமிழ்நாடு அரசின் காவல்துறை 13 பேரைக் கோரமாகச் சுட்டுக் கொலை செய்தது" எனக் கூறினார்.
மேலும், வழக்கு ஒத்தி வைக்கப்படும் நிலையில் வைகோ எழுந்து, "நீதிபதி அவர்களே, 22 ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி வருகின்றேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனுவின் மீதுதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் நான் வாதாடினேன்.
இதே பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் 2013 இல் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மேல் முறையீடு இன்னமும் நிலுவையில் இருக்கின்றது என்றார்.
இத்தனைக் காரணங்கள் இருந்தும், என்னை இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ள, நான் தாக்கல் செய்த மனு மீது இதுவரை தீர்ப்பு ஆயம் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது நீதிக்குப் புறம்பானது" என வாதிட்டார்.
அதற்கு நீதிபதி எந்த பதிலும் சொல்லாமல், வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார். இன்றைய விசாரணையில், வைகோவுடன், ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், துணைச்செயலாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி ஆகியோர் பங்கேற்றனர்.
ஸ்டெர்லைட்- சீராய்வு மனு தள்ளுபடி: தமிழக முதல்வரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்