அணைக்கட்டு தொகுதி மலைப்பாதையில் சாலை அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சாலை வசதி இல்லாததால் 3 கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என அணைக்கட்டு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன், “வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட 3 மலை கிராமங்களில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.
இந்தக் கிராமங்களுக்குப் போதிய சாலை வசதி இல்லாததால் அவசர காலங்களில் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.