'சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து 13.12.2018 அன்று அன்புத் தளபதி முன்னிலையில் கழகத்தில் இணைய இருக்கிறார் தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நெல்லை முழுக்க முளைத்துள்ளன.
அய்யாத்துரைப் பாண்டியனைப் பற்றி ஊருக்குள் விசாரித்தால் வந்த தகவல்கள் அக்மார்க் அதிர்ச்சி ரகம். ' ஜெயலலிதா முன்னிலையில் கழகத்தில் இணைய ஆசைப்பட்டார் அய்யாத்துரைப் பாண்டியன். 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக ஊருக்குள் உலா வருகிறார். இதைக் கணக்கு காட்டித்தான் அதிமுகவுக்குள் வந்தார். அதிமுகவில் உறுப்பினர் அட்டை வாங்கிய நான்காவது நாளில் படுத்த படுக்கையாக அப்பல்லோவில் அட்மிட் ஆனார் ஜெயலலிதா.
அதன்பிறகு அவர் மீண்டும் போயஸ் கார்டனுக்குள் கால் வைக்கவில்லை. அவர் இறந்த பிறகு போயஸ் கார்டனில் சசிகலாவைப் பார்த்து ஆதரவு தெரிவித்தார். அடுத்து வந்த நாள்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்றார். இப்படிப்பட்ட ராசியோடு இருப்பவர் கழகத்தில் இணைய இருக்கிறார். ஒரு பெரிய கம்பெனியில் சிஇஓவாக பதவியில் இருந்தவர் அய்யாத்துரை. அப்படி சம்பாதித்ததுதான் அந்த 200 கோடிகளும்.
தென்மாவட்டத்தில் நான்தான் பெரிய தலைவர் என்ற கோதாவில் வலம் வருகிறார். அவர் செல்லும் கட்சியின் தலைவர்களுக்கு எதாவது ஒரு சிக்கல் வருவது வாடிக்கையானது. இந்த ராசியைப் பற்றி திமுக பொறுப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். அவர் கட்சிக்குள் வருவதற்குக் காரணமே, பாராளுமன்றத் தேர்தலில் தளபதி சீட் கொடுப்பார் என நம்பித்தான். கட்சிக்குள் வந்த ஒரு சில மாதங்களிலேயே சீட்டைப் பற்றிய கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டார். இது எங்கே போய் முடியும் எனத் தெரியவில்லை. ஜே.கே.ரித்தீஷ் போல அய்யாத்துரை பாண்டியன் ஆவாரா எனவும் நெல்லை மாவட்டத்தில் பேச்சு நடக்கிறது. அய்யாத்துரை ராசியைப் பற்றி கழகத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு போக இருக்கிறோம்' என்கின்றனர் அங்கலாய்ப்புடன்.
-அருள் திலீபன்