ஆண்டாள் குலமறியாத பெண்ணா? - வைரமுத்து எதிராக போர்கொடி தூக்கும் ராமதாஸ்

ஆண்டாள் குலமறியாத பெண் என்பதையும் ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.

Jan 12, 2018, 10:56 AM IST

ஆண்டாள் குலமறியாத பெண் என்பதையும் ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.


தினமணி நாளிதழில் ‘தமிழின் ஆண்டாள்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை இழிவுபடுத்தும் வகையில் தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. எழுதியக் கட்டுரையின் தலைப்புக்கு சற்றும் தொடர்பில்லாத வகையில் ஆண்டாள் குறித்த கற்பனை மற்றும் யூகங்களை கவிஞர் திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

‘தமிழின் ஆண்டாள்’ கட்டுரையில் ஆண்டாளின் சிறப்புகளைப் பற்றி அடுக்கிக் கொண்டு வரும் கவிஞர் வைரமுத்து இடையிடையே சில வினாக்களைத் தொடுத்து, அதற்கு பதிலளிப்பதாகக்  கூறி ஆண்டாளை குலமறியா பெண்ணாக சித்தரிக்க முயன்றிருக்கிறார். அதன் அடுத்தக்கட்டமாக அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து, ‘‘Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple’’ என்று குறிப்பிடப் பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ஆண்டாளை வணங்குபவர்களையும், அவரது பாடல்களை நேசிப்பவர்களையும் காயப்படுத்தியிருக்கிறார்.

இது சர்ச்சையான பிறகு தமக்கு எதிரான கொந்தளிப்பைக் குறைக்கும் வகையில் தமது வரிகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் இந்த விளக்கம் காயப்பட்ட மனங்களுக்கு எந்த வகையிலும் மருந்தாக அமையாது.

இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆண்டாளைப் பற்றி அறியப்படாத நாட்டில் ஆய்வு என்ற பெயரில் அவரைப் பற்றி எவர் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதி பட்டம் பெற்று செல்லலாம்.

ஆனால், ஆண்டாள் வாழ்ந்த மண்ணில், அவரை வணங்குபவர்கள் வாழும் மண்ணில் அவர் குறித்த அடிப்படையற்ற சர்ச்சைக் கருத்தை பயன்படுத்துவதற்கு முன் வைரமுத்து பத்தாயிரம் முறையாவது யோசித்திருக்க வேண்டும். இந்தக் கருத்தை பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று வைரமுத்து குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும் போது, இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படும் என்பதை அறிந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

ஆண்டாள் குலமறியாத பெண் என்பதையும் ஏற்க முடியாது. ஆண்டாளின் பாசுரங்களில் மிகத் தெளிவாக “பட்டர்பிரான் கோதை”, “வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை” என்று பலவாறாக கோதையின் சுய அடையாளம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. எங்கோ இண்டியானா பல்கலைக்கழக நூலில் இடம்பெற்றுள்ள கருத்தை மேற்கோள் காட்டிய கவிஞருக்கு ஆண்டாள் பாசுரத்தில் இடம்பெற்றுள்ள அவரது அடையாளங்கள் தெரியாமல் போனது மிகவும் துரதிருஷ்டவசமானது தான்.

கவிஞர் வைரமுத்து தமிழுக்கு கிடைத்த தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதுவரை வேறு எவரும் சாதிக்காத வகையில் குடியரசுத் தலைவர் விருதை 6 முறையும், குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதையும் பெற்றவர் அவர். ஆண்டாளை நன்கு அறிந்த அவர் இப்படி ஓர் ஆராய்ச்சியில் இறங்கியிருக்க வேண்டுமா?

காலத்தால் அழிக்க முடியாத இலக்கியம் படைத்த ஆண்டாள் தமிழர்களின் அடையாளம் ஆவார். இது ஒருபுறமிருக்க சமூக பொறுப்புள்ளவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடும் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, அது மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.

தமிழகம் நல்லிணக்கத்தின் பூமி. அது காப்பாற்றப்பட வேண்டும். எனவே, எந்தவொரு மதம், எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நம்பிக்கை குறித்தும் வெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, தமிழகத்தில் அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவை தழைத்தோங்க பங்களிக்க வேண்டும்.

 

You'r reading ஆண்டாள் குலமறியாத பெண்ணா? - வைரமுத்து எதிராக போர்கொடி தூக்கும் ராமதாஸ் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை