நீ பஞ்சப் பராரியாக தமிழகத்திற்கு வந்தவன் - எச்.ராஜாவை தாக்கும் பாரதிராஜா

Bharathiraja condemned to H Raja about Andal controversy on Vairamuthu

Jan 12, 2018, 09:16 AM IST

நீ தமிழனாய் இருந்தால் அப்படி பேசி இருக்க மாட்டாய். பஞ்ச பராரியாயாக, பரதேசம் பிழைக்க வந்தவன். அடைக்கல் கொடுத்தது தமிழன் என்று எச்.ராஜாவிற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது, ஆண்டாள் குறித்த சர்ச்சையை உருவாக்கியது. இது குறித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராசா, வைரமுத்துவின் தாயார், மனைவியையும் இழிவுபடுத்துவதாக அமைந்தது. இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து எச்.ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா, “தமிழகத்தில் சமீபமாக தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டு, பேச்சுரிமை பறிக்கப்பட்டு, கருத்துரிமை பறிக்கப்பட்டும் ஒரு அவலை நிலையில் இருக்கின்றோமோ என்ற சந்தேகம் வருகின்றது.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு ஒரு இரவு முழுதும் என்னால் தூங்க முடியவில்லை. தமிழக வரலாற்றில் எத்தனையோ கவிஞர்கள், புலவர்கள், படைப்பாளிகள், இந்த மண்ணுக்கும், இடத்திற்கும், மொழிக்கும் பாடுபட்டு இரவா புகழ் தந்திருக்கிறார்கள்.

யார் இந்த வைரமுத்து. ஏழு முறை தேசிய விருது வாங்கிய ஒரே கவிஞன் வைரமுத்து. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்றால், கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியங்கள் அல்லவா?

அந்த அளவிலே தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை இழி சொற்களால், ஒருவன் எப்படி பேசலாம்? கவிப்பேரரசு வைரமுத்து என்பவன் தனி மனிதனல்ல; ஒரு இனத்தின் அடையாளம்.

சைவமும், வைணவமும் வெவ்வேறு என்று வெட்டிச் சாய்த்தபோது வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது மதம்; மாண்டது மனித இனம் என்பதை இன்று விவாதம் செய்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மதம் என்பது மாயை; மனிதம்தான் உண்மை என்பதை இந்த மதவாதிகல் என்றாவது உணரத்தான் செய்வார்கள்.

உலகமே கொண்டாடப்பட வேண்டிய ஒரு பெரும் கவிஞனை அநாகரிகமாக பேசும் உனக்கு இந்த பேசும் உரிமையை கொடுத்தது யார்? புரியவில்லை. உன்னால் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு இலக்கியம் படைக்க முடியுமா? சோர்ந்து கிடக்கும் மனிதர்களை தட்டியெழுப்பும் ஒரு பாடலை எழுத முடியுமா?

ஒரு அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்கிறார்கள். ஒரு எளிய, ஏழைக் குடும்பத்தில் பிறந்து தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்துவைத்த தமிழனை எப்படி உன்னால் பேச முடிகிறது?

உன்னைப்போன்ற மனிதர்களால் தான், படேல் என்ற மாபெரும் மனிதன் ஒன்றிணைத்து இந்தியாவை, துண்டாடுகின்ற ஒரு தூண்டுதலுக்கு ஆளாகி விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு வருகிறது.

ராசா! உன்னைப் போல் நிறைய ராசாக்கள் இருக்கிறார்கள். நானும் கூடத்தான் ராசா. ஆனால், கவிப்பேரரசு வைரமுத்து போல், வெகு சிலர் தான் இங்கு இருக்கிறார்கள்.

ஒன்றை அழுத்தமாக பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எங்கள் வம்சாவளி, எங்கள் உணர்ச்சிகளின் வடிகால் ஆயுதங்கள் தான். கால மாற்றங்களும் தான் விழிப்புணர்ச்சியும் தான் எங்களை ஆயுதக் கலாச்சராத்தில் இருந்து மாற்றிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் பேசியது வைரமுத்துவை அல்ல; எங்கள் தாய் வழி சகோதர, சகோதரிகளை. எங்கள் தொப்புள் கொடியை கொச்சைப் படுத்திவிட்டாய். உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களை பழிக்கிறது. தமிழ் உணர்வுகளையும் சேர்த்து.

நீ தமிழனாய் இருந்தால் அப்படி பேசி இருக்க மாட்டாய். பஞ்ச பராரியாயாக, பரதேசம் பிழைக்க வந்தவன். அடைக்கல் கொடுத்தது தமிழன். ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading நீ பஞ்சப் பராரியாக தமிழகத்திற்கு வந்தவன் - எச்.ராஜாவை தாக்கும் பாரதிராஜா Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை