தருமபுரி இளவரசன் மரணம் எப்படி நடந்தது? - தண்டவாள மர்மத்தை விலாவாரியாக விளக்கும் பாமக மாஜி எம்பி செந்தில்

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்தை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துவதில் வல்லவர் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு, அந்தக் கதையை இளவரசன் மரணத்தோடு முடிச்சுப் போட்டிருக்கிறார்.

டாக்டர். செந்திலின் பதிவு இங்கே அப்படியே:

பரியேறும் பெருமாள் பல்வேறு தரப்பினரால் மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படம். நான் திரைப்பட அரங்கத்துக்குச் சென்று திரைப்படம் பார்ப்பது அரிதிலும் அரிது. அதனால் இந்தத் திரைப்படத்தை உடனடியாகப் பார்க்க முடியவில்லை.

அமேசான் பிரைம் வீடியோவில் வந்த பிறகு இதனைப் பார்த்தேன்.

படத்தின் இறுதிக் காட்சியில் பரியேறும் பெருமாளை அடித்து, தண்டவாளத்தில் போட்டு, அவன் வாயில் மதுவை ஊற்றி, அருகில் ஒரு மதுப் புட்டியை வைத்து, அவன் ரயில் வரும்போது அடிபட்டுச் சாக வேண்டும் என்பதாக திட்டமிடப்படுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இது தர்மபுரியில் தற்கொலை செய்துகொண்ட இளவரசன் மரணத்தை ஒட்டி சித்தரிக்கப்பட்ட காட்சி என்று என் நண்பர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். சில தொலைக்காட்சி விவாதங்களில் கூட 'இளவரசனின் சந்தேகமான மரணம்' அல்லது 'இளவரசன் கொலை' என்று சிலர் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன்.

நிறையத் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு, ஒரு கொலையை, சாதாரணமாக தற்கொலையாகக் காட்டி விடலாம் என்ற எண்ணம் ஏற்படும். இளவரசன் மரணத்தை 'தற்கொலை' என, எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி காவல்துறை நிரூபித்திருக்கிறது.

1. இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என கூறப்பட்டது. இளவரசன் தற்கொலைச் செய்தி கேள்விப்பட்டவுடன் அந்த இடத்துக்கு வந்து அவன் உடலை பார்த்த அவனுடைய தந்தை ''இப்படிச் செய்து விட்டாயே'' என்று கதறி அழுகிறார். பின்னர் அவரே ''என் மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை'' என்று சொன்னார்!

இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தான் என்பதற்கு காவல்துறை அளித்த சான்றுகள்:

சென்னையில் தி. நகரிலுள்ள ஜெமினி ரெசிடென்சி ஓட்டலில் 7.6.2013 அன்று தங்கியிருந்த இளவரசன், தன் கை மணிக்கட்டை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தான். கையில் கட்டோடு இந்தியா டுடே பத்திரிகையின் அன்றைய ஆசிரியராக இருந்த பத்திரிகையாளரிடம் அவன் பேசிய புகைப்படங்கள் இருக்கின்றன.

அந்தப் பெண் நிருபரும், ''இளவரசன் தற்கொலை செய்துகொள்ளும் அளவு கோழை இல்லை'' என்று சொன்னார்! காவல்துறை அந்த விடுதியின் பணியாளராக இருந்த சந்தோஷ் மெஹ்ரா என்பவரை விசாரித்து இந்த நிகழ்வுகளை உறுதி செய்து கொண்டார்கள்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சிறிது முன்பாக அவனுடைய நண்பர்கள் கார்த்திக், மனோஜ் குமார் என்பவர்களிடம் பேசும்போது, தான் வழக்கமாக மது அருந்தும், தர்மபுரி கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ஆலமரத்தின் அடியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருப்பதாகவும், தான் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறினார்.

தனக்கு தாஜ்மஹால் போன்ற ஒரு நினைவுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டான். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன் காதலிக்கு எழுதிய கடிதம்.

இந்தக் கடிதம் இளவரசனின் சட்டைப்பையில் இருந்து எடுக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. காவல்துறை விசாரணையில் பழனிசாமி என்பவர் இந்தக் கடிதத்தை எடுத்து பாண்டியன் என்பவரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

போலீசார் அதனை கைப்பற்றினார்கள். அந்தக் கடிதத்தில் இளவரசன் பின்வருமாறு எழுதியிருந்தான்:

‘’....கண்டிப்பா சொல்றேன். நான் உன்ன விட்டுப் போகனும்னு நினைக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசை ஆனால் என்னால உன்னை பிரிந்து வாழ முடியல.

என்ன மன்னிச்சிடு. நான் இந்த உலகத்தை விட்டு போகிறேன்..’’ என்பதாகப் போகிறது அந்தக் கடிதம்.

இந்தக் கடிதம் தடயவியல் நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டு, அந்தக் கையெழுத்து இளவரசனுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

2. இளவரசன் மது அருந்தியிருந்தற்கான சான்று, அவன் மேல் மது வாசனை இருந்தது என்பது அல்ல. யாரோ அவன் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றி, அவன் மது அருந்தியது போல ஜோடித்தார்கள் என்பது அல்ல! பின்வரும் ஆதாரங்களின் மூலம் இளவரசன் மது அருந்தியதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் காவல்துறை உறுதி செய்தது:

மது வாங்குவதற்கான பணத்திற்காக இளவரசன் தன் தந்தையுடைய வங்கி அட்டையை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள். டாஸ்மாக் கடையில் மது வாங்கியதற்கான ஆதாரங்களையும் காவல்துறையினர் சேர்த்தனர்.

இளவரசனுடைய கைபேசியில் அவருடைய பேச்சுக்களை தானாகவே பதிவு செய்யும் அமைப்பை வைத்திருந்தார். அந்த கைபேசியில் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு, அதாவது 4.7.2013, நண்பகல் 12 மணி 30 நிமிடத்திற்கு அவனுடைய நண்பன் அறிவழகன் என்பவரிடம் பேசும் போது தான் தர்மபுரி கலைக்கல்லூரியின் பின்னால் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டு இருப்பதாகக் கூறியது பதிவாகியிருந்தது.

இளவரசனின் உடற்கூறு ஆய்வில் அவனுடைய ரத்தத்தில் லிட்டருக்கு 90 மில்லி என்ற அளவில் மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அவன் மிதமிஞ்சிய போதையில் இருந்ததை உறுதி செய்தது.

3. இளவரசனுடைய உடல் மூன்று முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் இல்லாத நடைமுறையாக முதன்முறையாக இளவரசன் தரப்பு வழக்கறிஞரின் அழுத்தத்தின் காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஒரு நிபுணரும் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டார். மூன்றாம் முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டபோது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இளவரசன் இறந்த பிறகு அவனுடைய உடலின் எல்லாப் பகுதிகளும் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எலும்பு முறிவு அல்லது வேறு காயங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இளவரசன் எந்தவிதமான வன்முறைக்கும் ஆளாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இளவரசனின் சாவு தற்கொலை.

இந்தத் தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்கள், இளவரசன் தன் 19 ஆம் வயதில், கல்வியை நிறைவு செய்யாமல், ஒரு குடும்பத்தை நடத்துவதற்கான வருவாய் வழியை ஏற்படுத்திக் கொள்ளாமல், உணர்ச்சி வேகத்தில், திருமணம் என்கிற மிகப்பெரிய முடிவை இளவரசன் எடுத்ததும், அவனுக்கு ''நீ முதலில் உன் படிப்பை நிறைவு செய். உனக்கென்று வருவாயை உருவாக்கிக் கொள். அதன் பிறகு நீ விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வினை தொடங்கலாம்'' என்று அறிவுரை வழங்கி, வழி நடத்தவேண்டிய பெற்றோரும் நண்பர்களும் அவனுடைய இந்த முட்டாள்தனமான முடிவுக்கு ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தியதும் தான்.

இளவரசனின் தற்கொலையில் உழைப்பாளி வர்க்க இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றை அறிந்து கொள்ள முற்படாமல், அதனை கொலை என்று முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் என்பவர்களே பொய்ப் பிரச்சாரம் செய்வது தவறு. தொடர்ந்து அப்படிச் செய்வது, சாதிப் பிரிவினைகளை இன்னமும் ஆழப்படுத்தி, சாதி மோதல்களை ஊக்கப்படுத்தி, குறுகிய கால அரசியல் இலாபங்களைத் தேடும் சதி.

பா. ரஞ்சித்தின் அபரிதமான அரசியல் ஆர்வத்தைப் பார்க்கும்போது, இந்தத் திரைப்படத்தில், ரயில் தண்டவாளத்தில் பரியேறும் பெருமாளை அடித்துப் போட்டு, கொலை செய்ய முயல்வது போன்ற காட்சி அவருடைய அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த அரசியல் நோக்கம் சாதி மோதல்களைத் தூண்டி, இலாபம் பார்ப்பதாக அமைந்துவிடக் கூடாது.

தன் எளிய சூழ்நிலைகளைத் தாண்டி, பாரம்பரிய தடைகளைத் தகர்த்து, உயர்கல்விப் பயில வரும் ஒடுக்கப்பட்ட இளைஞனின் சவால்களை படம் பிடித்து காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். ஆனால் அம்பேத்கர் காட்டிய அற்புதமான வழியை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அம்பேத்கர் தந்திருக்கும் உன்னதமான செய்தியை மாரி செல்வராஜ் சொல்லவே இல்லை. ’படித்துக் கொண்டே இரு’’ என்பதே அந்தச் செய்தி.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!