மாநகராட்சி டெண்டர்களில் ரூ740 கோடி ஊழல் - அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

M.K.Stalin Emphasis on take action against Minister Velumani in the Corporation tender

by Isaivaani, Dec 13, 2018, 16:45 PM IST

740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழலுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் தி.மு.க நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் ஊழல், சென்னை மாநகராட்சியில் எவ்வித அச்சம் - நாணமுமின்றி தலைவிரித்தாடுவது அதிர்ச்சியளிக்கிறது. புதிதாக பேருந்து மற்றும் உள்ளூர்ச் சாலைகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் மழைநீர்க் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், அமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் கைகோர்த்து அமைத்துள்ள கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சித்திட்டத்தின் கீழும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்புக் கழக நிதியின் கீழும் நடைபெற வேண்டிய பணிகளுக்கான டெண்டர்களில் நிகழ்ந்துள்ள வரலாறு காணாத மோசடியும், முறைகேடுகளும் அதிமுக அரசின் “கமிஷன், கலெக்சன், கரெப்ஷன்” என்ற ஊழல் சாக்கடை நிரம்பிய நிர்வாகத்திற்கு சான்றாவணமாக நிற்கிறது.

சென்னை மாநகராட்சி டெண்டர்களில் சிண்டிக்கேட் அமைத்து ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் டெண்டர் போட்டுக் கொண்டுள்ளார்கள்; அந்த டெண்டர்கள் சென்னை மாநகராட்சி விலைப்பட்டியலை விட 30 முதல் 50 சதவீதம் வரை அதிகமாக உள்ளது; பிடுமென் போடுவதற்கு விலைப்பட்டியலை விட 100 சதவீத விலை அதிகமாக போட்டிருக்கிறார்கள்; சிமெண்ட் சாலைகள் போட ரெடிமிக்ஸ் எம்30 சிமெண்ட் கான்டிராக்ட் விலை 50 சதவீதம் அதிகம் போடப்பட்டுள்ளது; 30 நாட்கள் டெண்டர் நோட்டீஸ் காலம் ஊழலுக்கு வழி விட 15 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது; சில டெண்டர்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; பல ஒப்பந்ததாரர்கள் ஒரே கணிணியிலிருந்து ஆன்லைன் டெண்டர் போட்டிருக்கிறார்கள் என்று எங்கும் காணாத “இமாலய முறைகேடுகள்” சென்னை மாநகராட்சி டெண்டரில் வெளிவந்து, அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் துர்நாற்றத்தில் சிக்கித் தவிக்கிறது.

“முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் வழக்குகள் அதிகம் பதிவு செய்திருக்கிறோம்” என்று நாளிதழ்களுக்கு செய்தி தானம் செய்து கொண்டிருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, இந்த மெகா டெண்டர் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. டெண்டர்கள் ரத்து என்று பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் அதிரடி சோதனை நடத்தி இந்த ஊழலை விசாரிக்க முயற்சிக்கவில்லை. ஏற்கனவே தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய புகார் அமைச்சர் மீது அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் உறவினர்களுக்கே டெண்டர் வழங்கி ஊழல் செய்து வரும் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரபூர்வமான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிமுக அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் ஊழல் புகார் என்றால் அஞ்சி நடுங்கி பதுங்கிக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல - அதன் ஊழல் ஒழிப்பு முழக்கத்தையே சாக்கடைக்குள் தள்ளியிருக்கிறது.

ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி ஊழலை மறைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் இப்போது இந்த மெகா டெண்டர் ஊழலையும் மூடி மறைக்க உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு துணை போகிறார். டெண்டர் முறைகேடுகளுக்கு அவரே முன் வந்து ஊழல் புகார் கொடுக்காமல், 740 கோடி மதிப்புள்ள டெண்டர்களில் 57 கோடி மதிப்புள்ள டெண்டர்களை மட்டும் “வெத்து வேட்டான” வேறு சில காரணங்களைச் சொல்லி ரத்து செய்திருப்பது, ஊழலில் அமைச்சரும் - மாநகராட்சி ஆணையரும் கூட்டுச் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. “சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் அமைப்பை கூண்டோடு கலைக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்து தடையுத்தரவு பெற்றது இப்படி சென்னை மாநகராட்சியில் கொள்ளையடிக்கவா? உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களை “பட்டுக்கம்பளம்” போர்த்தி மறைக்கவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆகவே 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி பணிக்கான டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை எவ்வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்து, ஊழலுக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகள், துறை அமைச்சர் திரு வேலுமணி - இந்த ஊழலை இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாநகராட்சி “விஜிலென்ஸ் அதிகாரிகள்” அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பணியில் - குறிப்பாக சென்னைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளில் நடைபெறும் ஊழல்களை இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் அதையும் மீறி நடவடிக்கை எடுக்கத் தவறினால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

You'r reading மாநகராட்சி டெண்டர்களில் ரூ740 கோடி ஊழல் - அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை