அதிமுக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது. அதற்காக நடத்தும் சித்து விளையாடல்தான் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு என்று திமுக கூறியுள்ளது.
சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன், “உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இல்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியதும் வார்டு மறுசீரமைப்பு என்று சொல்லி காலம் தாழ்த்துவது சரியல்ல.
இப்போதும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு யாராவது நீதிமன்றத்திற்கு செல்வார்கள். காலம் தாழ்த்தலாம் என்று தான் இந்த அரசு நினைக்கிறது. இந்த அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது. அதற்காக நடத்தும் சித்து விளையாடல்தான் இது என்றும் அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்த துறையின் அமைச்சர் எஸ்.பி. மணி, “தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நீதிமன்றத்திற்கு நீங்கள்தான் சென்றீர்கள்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின்,“ உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை முறையாக நடத்தவில்லை என்பதால்தான் நீதிமன்றம் சென்றோம். அதைத் தான் நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது. தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு தேர்தலை நடத்த வேண்டும்” என்றார்.
அமைச்சர் வேலுமணி,“ முறையாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.