சசிகலா குடும்பத்தில் தனித்துத் தெரியும் வண்ணம் சமூக சேவை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. கஜா பாதித்த பகுதிகளுக்கு தென்னங்கன்றுகளை அனுப்பி, விவசாயிகளை அசர வைத்திருக்கிறார்.
தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் பாதிப்பால் கலங்கிப் போய் இருக்கிறார்கள் விவசாயிகள். 200 கிலோ மீட்டர்களுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மின் கம்பங்களை சீரமைப்பது, அழிந்து போன மரங்களை அப்புறப்படுத்துவது என அரசு நிர்வாகம் சுழன்று கொண்டிருக்கிறது.
இந்தப் புயலால் மின்வாரியத்துக்கு மட்டும் 1,500 கோடி ரூபாய் இழப்பு எனக் கூறியிருக்கிறார் மின்துறை அமைச்சர் தங்கமணி. புயல் பாதிப்பில் வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதி கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த நேரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்து வருகின்றன. கடந்த வாரம் 6 டன் அரிசி, 15 நிவாரணப் பொருட்கள் என டெல்டாவை உருக வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நிலையில், அரிசி, பருப்புகளைக் கொடுப்பதைவிடவும் தென்னங்கன்றுகளைக் கொடுப்பது நலம் பயக்கும் எனக் கருதி, லாரி லாரியாக தென்னங்கன்றுகளை அனுப்பி வைத்திருக்கிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா.
இந்த சம்பவத்தைப் பற்றிப் பதிவிட்டுள்ள கிருஷ்ணபிரியா ஆதரவாளர்கள், ' அரிசி, பருப்பை நிவாரணமாக வழங்குபவர்கள் மத்தியில் அவசியமான நாட்டு ரக தென்னங்கன்றுகளை வழங்கி இருக்கிறது கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் நிலத்தை நிமிர்த்த இப்போதைய தேவை தென்னங்கன்றுகள் தான். வளர்க்க நம்பிக்கை இருக்கிறது, ஊன்ற கன்றுகள் தாருங்கள். கோடி கன்றுகளை வழங்க கைகோப்போம் அனைவரும்!' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
-அருள் திலீபன்