சேலம் மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூரில் நடந்த விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி, கின்னஸ் சாதனைக்கான விருதை ஆட்சியர் ரோஹிணியிடம் வழங்கினார்.
கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி, உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டு கைகழுவுதலல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. யூனிசெப் மற்றும் கின்னஸ் உலக சாதனை விதிமுறைகளுக்கேற்ப இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவ மாணவியர், அரசு அலுவலர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், சேவை மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள், பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பினரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வழக்குரைஞர்கள் மற்றும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் என்னும் பட்டய கணக்கர்கள் அடங்கிய நடுவர் குழுவினர் இச்சாதனை நிகழ்வை கண்காணித்தனர். 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்ட இந்நிகழ்வு கின்னஸ் நிறுவனத்தால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சௌதி அரேபியாவில் 724 பேர் பங்கு கொண்டதே கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.
15 லட்சம் பேர் பங்கு பெற்ற கைகைழுவும் தொடர்நிகழ்வுக்கான கின்னஸ் சாதனை விருதை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆர். பாஜிபாகரேயிடம் வழங்கினார்.