கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவச் சிலை நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயண சாமி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இவர்களை தவிர, நடிகர் ரஜினிகாந்தும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டார். ஆனால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை.
இன்று மதுரைக்கு விரைந்த கமல்ஹாசன் விழாவில் கலந்துக் கொள்ளாததற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அப்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களை நான் பார்வையிடவில்லை. அதில், சில கிராமங்களை கடந்த சில நாட்களாக பார்வையிட்டு வருகிறேன். குறிப்பாக, கொடைக்கானலில் உள்ள கிராமங்களை பார்வையிட இன்றும் செல்கிறேன். இதனால், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொள்ள முடியவில்லை. அழைப்பிதழ் வந்தது. இருப்பினும் விழாவுக்கு வருவதாகவும் சொல்லவில்லை.
கருணாநிதி மீது எனக்குள்ள மரியாதையை நான் மீண்டும் ஆதாரப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
இவ்வாறு கமல் கூறினார்.