காடுவெட்டி குரு குடும்பம் நொந்து நூடுல்ஸாகிக் கொண்டிருக்கிறது. மகள் திருமணம், கார் ஜப்தி என அடுக்கடுக்கான சோதனைகளுக்கு ஆளானாலும், குருவை முன்வைத்து ராமதாஸை வீழ்த்த கடல் கடந்து வியூகம் வகுக்கப்படுகிறதாம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெ.குரு. வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20). இவரும், காடுவெட்டி குருவின் தங்கை சந்திரலேகாவின் மகன் மனோஜ்கிரண்(27) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். இவர்களது திருமணம் கும்பகோணத்தில் திடீரென திருமணம் நடந்தது. இதன் பிறகு விருத்தாம்பிகையும், மனோஜ்கிரணும் மணக்கோலத்தில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
இதைப் பற்றிப் பேட்டியளித்த மனோஜ்கிரண், நான், காடுவெட்டி குருவின் தங்கை மகன். நானும் விருத்தாம்பிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்துக்கு காடுவெட்டி பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம் என்றார். இந்த சம்பவத்துக்கு முன்னதாக காடுவெட்டி குரு மகன் கனல் அரசன், தனது தாயைக் கடத்தி வைத்திருப்பதாகவும் பூந்தமல்லியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாகவும் வாட்ஸ்அப் வீடியோவில் தோன்றிப் பேசினார். குரு குடும்பத்தையே ராமதாஸ் படிப்படியாக அழித்துக் கொண்டிருப்பதாகவும் பேச்சு வந்தது. இந்தநிலையில், நேற்று மகேந்திரா பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் இருந்து குருவின் காரை, ஜப்தி செய்துவிட்டார்கள். இதனால் இன்னும் நொந்து போய் உள்ளனர்.
ஆனாலும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் குரு குடும்பத்தை முன்வைத்து பாமகவை வீழ்த்துவதற்கு சிலர் தயாராகி வருகிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாம் கடல் கடந்து வகுக்கப்படுகின்றன. அண்டை நாட்டில் இருந்து தான் இப்படியொரு சதிச்செயல் நடக்கிறது என்பதை அறிந்து அதிர்ந்தாராம் அன்புமணி. எதிர்ப்பாளர்களை சமாளிக்கவில்லையென்றால், பாமகவை வீழ்த்த பெரும் தொகையையே அவர்கள் செலவழிப்பார்கள் எனவும் பயப்படுகிறார். ராமதாஸ் மீதான பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள குரு குடும்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேர்தல் வரையில் இந்த ஆட்டம் தொடரும் என்கின்றனர் வன்னிய சொந்தங்கள்.
-அருள் திலீபன்