மு.க.ஸ்டாலினுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம் சோனியா காந்தியின் சென்னை வருகை. அதே குஷியில் ராஜஸ்தான், ம.பியில் நடக்கும் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கும் கிளம்பிவிட்டார்.
இதில், ரஜினி வருகையைப் பற்றித்தான் திமுகவினர் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பெய்ட்டி புயலின் சீற்றத்தால் நேற்று நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. மழை பெய்யலாம் என்ற தோற்றத்துடனேயே நேற்றைய பொழுது முடிந்தது.
சிலை திறப்பு விழா முடிந்த பிறகு ராயப்பேட்டை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ' நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாத நாள். தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான, மறக்க முடியாத நாள்.
தந்தை பெரியார், கருணாநிதிக்கு சிலை வைக்க முயன்றபோது அதனை தடுத்தவர் கருணாநிதி. கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன். கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார்.
தமிழகம் எதிர்த்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வெளிநாட்டில் மரணம் நடந்தால் பிரதமர் ட்வீட் செய்கிறார். டெல்டாவில் மரணம் அடைந்தால் இரங்கல் தெரிவிப்பதில்லை.
பரம்பரை மன்னர் என்ற மமதையுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் மோடி. வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம்' என்றெல்லாம் முழங்கியவர், 'ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். “ராகுல்காந்தியே வருக... நல்லாட்சி தருக” என அவரைப் பிரதமராக்க முன்மொழிகிறேன்' எனப் பேசினார் ஸ்டாலின்.
இந்தப் பேச்சைப் பற்றிக் கூறும் திமுக பொறுப்பாளர்கள், ராகுலைப் பிரதமராக முன்னிறுத்திப் பேசியதில் ஸ்டாலின் செய்யத் தவறியது ஒன்றுதான். அண்ணா அறிவாலயத்தில் சில மணித்துளிகள் இருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார் ரஜினி. அவர் இருக்கும்போதே மேடைக்கு வருமாறு ஸ்டாலின் அழைத்திருக்கலாம்.
அப்படிச் செய்திருந்தால் பாஜகவுக்கு செக் வைத்தது போல இருந்திருக்கும். மோடி பலசாலி எனப் பேசிய ரஜினிக்கும் தர்மசங்கடமாக மாறியிருக்கும். இந்த அரசியலைச் செய்யத் தவறிவிட்டார் ஸ்டாலின். இனி இப்படி ஒரு வாய்ப்பு எப்போதும் கிடைக்கப் போவதில்லை' என்கிறார்களாம்.
- அருள் திலீபன்