பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான தினகரன் சந்தித்து பேசினார். அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கதுரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியில் வரவில்லை என்றாலும், அமமுகவில் தினகரன் பொதுச் செயலாளராக ஆவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்கின்றனர்.
மத்திய வருமான வரித்துறை கடந்த இரண்டு நாள்களாக சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தியது.
இதன் பிறகு நேற்று நடைபெற்ற சந்திப்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று தினகரன் அறிவித்து இருந்தார்.
ஒரு சிலர், மேல்முறையீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சசிகலாவிடம் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மத்திய ஏஜென்சிகளின் விசாரணைகளை சசிகலா விரும்பவில்லை. என்ன செய்தாலும் நம்மை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என நினைக்கிறார்.
மீண்டும் அதிமுகவோடு இணைவது குறித்து தங்க.தமிழ்ச்செல்வன் பேசியிருந்தார்.
எடப்பாடி அண்ட் கோவுக்கு தினகரன்தான் பெரிய பிரச்னையாக இருக்கிறார். அவரைக் கழட்டிவிட்டு அதிமுகவில் சேருவதற்கும் சிலர் துடிக்கின்றனர். இன்னும் 3 ஆண்டுகள் சசிகலா சிறையில் இருக்க வேண்டிய நிலை இருப்பதால், அதுவரையில் சசிகலா தொல்லை கொடுக்க மாட்டார் எனவும் அமமுக வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
மறுபடியும் அதிமுகவா என்பதை ஏற்பதற்கு தினகரன் விரும்பவில்லையாம். இந்த சூழ்நிலையில், அமமுகவில் பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலாவைக் கழட்டிவிட்டு அவரே கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகிக்கவும் தயாராகிவிட்டார். அதிமுகவா...அமமுகவா என்ற குழப்பத்தில் கட்சித் தொண்டர்கள் இருந்தாலும் இரட்டை இலை பக்கமே அனைவரும் போவார்கள் என்பதையும் ஆளும்கட்சியும் உணர்ந்து வைத்திருக்கிறது.
-அருள் திலீபன்