மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, உணவு, 75 நாட்கள் தங்கியதற்கான அறை வாடகை என மொத்தம் 7 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இதுதொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதில், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் முதல் அப்போல்லோ மருத்துவர்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
அந்த வகையில், முன்னாள் அமைச்சர் பொன்னையன் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவரை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வமிடமும் நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அதற்கான செலவு குறித்த அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி செலவானதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜெயலலிதாவிற்கு மேற்கொண்ட சிகிச்சைக்காக ரூ.92.7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிசியோதெரப்பி சிகிச்சைக்கான சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடி வழங்கப்பட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டுக்கான 75 நாள் வாடகை மட்டும் ரூ.24 லட்சம் எனவும், ஜெயலலிதாவை உடன் இருந்து கவனித்துக் கொண்ட சசிகலா குடும்பம் தங்கிய அறை வாடகை ரூ.1.24 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் மொத்த செலவு ரூ.6.85 கோடியாகும். இதில், அதிமுக 6.40 கோடி ரூபாயை இரண்டு தவணையாக காசோலை மூலம் பில் கட்டிவிட்டதாகவும், ரூ.45 லட்சம் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.