மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக கட்சியை நடத்தி வருகிறார் திவாகரன். அதிமுகவோடு சேர்ந்து தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம்.
கஜா புயல் பாதிப்பில் டெல்டா மாவட்டம் மட்டும் அல்ல, திவாகரனின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது. புயல் பாதித்த நாட்களில் மக்களுக்கான நிவாரணப் பொருள் வழங்கும் வேலைகளில் அ.தி.கட்சி ஆர்வம் காட்டியது.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீடியாக்களிடம் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் திவாகரன். சமீபத்தில் அவர் பேசும்போதும், ' அண்ணா திராவிடர் கழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைகிறார்கள். சசிகலா செய்த காரியங்கள் தவறாக, கெடுதலாக போய்விட்டது.
அவர் சதியில் மாட்டிக் கொண்டார். அதனை மீட்க அண்ணா திராவிடர் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். டி.டி.வி. தினகரன் 1 கோடி உறுப்பினர்கள், 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்க போவதாக கூறிக்கொண்டு, நலத்திட்டம் என்ற பெயரில் குக்கர் உள்ளிட்ட பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருகிறார்.
மக்கள் கூட்டத்தை பணம் கொடுத்து கூட்டுகின்றனர். இந்த கூட்டத்தை பார்த்து பலர் ஏமாந்து வருகின்றனர். எங்கள் உடம்பில் அ.தி.மு.க. ரத்தம் ஓடுகிறது' என்றார்.
'தேர்தல் தொடர்பாக தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்பது அவரது கருத்தாக இருக்கிறது. அதே சமயத்தில் அதிமுகவை விட்டால் அவருக்கு வேறுவழியில்லை. தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் இரட்டை இலையில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போதும் என நினைக்கிறார்.
இதே தொகுதியில் போட்டியிட தினகரனும் முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஆர்.கே.நகர் தொகுதியை கை கழுவுகிறாராம். இந்த இரண்டு பேரும் மோதினால், இரட்டை இலைக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சசிகலா ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து தொகுதியின் ரிசல்ட் அமைய இருக்கிறது. ஒருவேளை தினகரன் போட்டியிட்டால், அவரை மண்ணைக் கவ்வ வைக்கும் அத்தனை வேலைகளையும் எடப்பாடி செய்வார். திவாகரனே போட்டியிட்டால் ஆளும்கட்சிக்கு செலவும் மிச்சம். இதையெல்லாம் கணக்குப் போட்டு தூது அனுப்பி வருகிறார் திவாகரன்.
'தேர்தல் நெருக்கத்தில் திவாகரனை சேர்த்துக் கொள்வது பற்றி எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்' என்கிறார்கள் அதிமுகவினர்.
-அருள் திலீபன்