குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிக்கி உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அப்போது நடந்த விவாதத்தில் முதல்வர் உட்பட அமைச்சர்களுக்கு விஜயபாஸ்கர் விடுத்த எச்சரிக்கைதான் இப்போது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
குட்கா ஊழல் வழக்கின் விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல மணிநேரம் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நடத்தி உள்ளனர்.
இந்த விசாரணையின் அடிப்படையின் மேலும் சில இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
இது தொடர்பாக விஜயபாஸ்கரை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, யார் சொல்லி எனக்கு நெருக்கடி தருகிறீங்கன்னு தெரியும்... அதெல்லாம் ராஜினாமா செய்யவே முடியாது என அடம்பிடித்திருக்கிறார் விஜயபாஸ்கர்.
அத்துடன், என் மீது குட்கா வழக்கு விசாரணை நடைபெறுகிறது... அதனால ராஜினாமா செய்ய சொல்றீங்க... ஏன் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் நீங்க உட்பட அமைச்சர்கள் பெயரும் இருக்கிறது.. அதற்காக நீங்க எல்லோரும் ராஜினாமா செய்வீங்களா? உங்களுக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா? என எகிறியதுடன் என்னை டிஸ்மிஸ் செய்தால் இதே விவகாரத்தை பொதுவெளியிலும் பேச நேரிடும் எனவும் எச்சரித்தாராம்.
விஜயபாஸ்கரின் இந்த கோபமும் எச்சரிக்கையும் கோட்டை வட்டாரங்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்துவிட்டதாம்!