சேலம்- சென்னை இடையேயான புதிய 8 வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கான பயண நேரத்தை குறைக்க 8 வழி சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய 8 வழிசாலையால் ஏராளமான விளைநிலங்கள், வீடுகள் பாதிக்கப்படும் நிலை உருவானது.
இதற்கான இழப்பீட்டுத் தொகை பல மடங்காக வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகளோ இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான சர்வே எண்களை குறிப்பிட்டு 8 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படும் என விளம்பரம் ஒன்று அரசால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இது சேலம் சுற்றுவட்டார கிராம மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு எதிராக பேரணி நடத்த விவசாயிகள் முயற்சித்தனர். ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.