அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் தற்போதைய எதிரி தினகரனுடன் ரகசிய டீலிங்கில் ஈடுபட்டதால் தான் ஓ.ராஜா தூக்கியடிக்கப்பட்டார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
இதுதொடர்பாக நாம் விசாரித்தபோது, மதுரை மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் ஓ.ராஜா விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே ஓ.ராஜா போட்டியிடுவதை விரும்பவில்லையாம். இதை வெளிப்படையாகவே அவரிடம் தெரிவித்தும்விட்டனராம். அதேபோல், ஓ.ராஜா போட்டியிடுவதை மதுரை மாவட்ட அதிமுகவினரும் ஏற்கவில்லையாம்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா மதுரை வந்து போட்டியிடுவது எப்படி நியாயம் என பொங்கி இருக்கிறார்கள் அதிமுகவினர். ஆனால், இதைப்பற்றி எல்லாம் ஓ.ராஜா அலட்டிக் கொள்ளவில்லை. அதிமுகவின் ஆதரவு தமக்கு இல்லை என்று திட்டவட்டமானதால் தினகரனோடு டீலிங் பேசி இருக்கிறார் ஓ.ராஜா. இதன்படி, ஓ.ராஜாவை எதிர்த்து தினகரன் தரப்பில் யாரும் போட்டியிடவில்லை. இதனால், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தேர்தலில் ஓ.ராஜா எதிர்ப்பு ஏதுமில்லாமல் வெற்றிப்பெற்றார். அவரது வெற்றி இன்று காலை தான் அறிவிக்கப்பட்டது.
இதனால், கடுப்பாகிப்போன மதுரை அதிமுகவினர் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் கோபத்தைக் கொட்டித்தீர்த்தனராம். இப்படி, கட்சியை மீறி தன்னிச்சையாக செயல்படுவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றால் ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என போர்க்கொடி தூக்கினர் அதிமுகவினர்.
இதுதொடர்பாக, ஓபிஎஸ்சுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார். ஓபிஎஸ்சும் வேறு வழியில்லாமல் ஓ.ராஜா மீதான நடவடிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, இருவரது கையெழுத்துடன் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் என்ற அறிக்கை வெளியானதாம்.
-எழில் பிரதீபன்