பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.கட்சியோடு கூட்டணி வைப்பதைப் பற்றிய முதல்கட்ட பேச்சுவார்ததையைத் தொடங்கியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ். திமுக அணியில் இருந்து காங்கிரஸைப் பிடிக்க நினைத்த தினகரனின் எண்ணம் நிறைவேறாததால், ஒத்த கருத்துடைய கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
தேசியக் கட்சிகள் ஒவ்வொன்றும் கூட்டணி வைப்பதற்காக மாநிலக் கட்சிகளை நாடத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் அணியில் கம்யூனிஸ்ட்டுகள் இடம் பிடித்துவிட்டனர்.
இதில், ராகுல்காந்தி பிரதமர் என்ற வார்த்தையை மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. ' அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வோம். ரிசல்ட் வரும்போது பிரதமரை முடிவு செய்வோம். அதுவரையில் யாரையும் முன்னிறுத்த வேண்டாம்' எனக் கூறிவிட்டது மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ.
இதனால் ஸ்டாலின் வைத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. சிபிஎம் கருத்தை சிபிஐ கட்சியின் டி.ராஜா வரவேற்றாலும் தமிழக சிபிஐ செயலாளர் முத்தரசன், ஸ்டாலின் கருத்துக்கு சல்யூட் அடித்துவிட்டார்.
கூட்டணி அமையாமல் அதிமுகவும் தனித்து நிற்கிறது. இது தொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் நேரத்திலேயே கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்.
யார் பலமானவர்கள், பலவீனமானவர்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதியன்று சசிகலாவை சந்தித்தார் தினகரன்.
அப்போது பேசிய சசிகலா, கூட்டணியை வலுவாக உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் தனித்துப் போட்டியிட்டு நமக்கு செல்வாக்கான தொகுதிகளில் வெற்றி பெற முயற்சிப்போம். நிச்சயம் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் எனப் பேசியிருக்கிறார். ஆனால், தனித்துப் போட்டி என்பதில் தினகரனுக்கு உடன்பாடில்லை.
திமுக தலைமையில் உருவான அணியால் அதிகம் நொந்து போயிருக்கிறார் தினகரன்.
காங்கிரஸ் கட்சி தன்னுடைய தலைமையின்கீழ் வர வேண்டும் என திருநாவுக்கரசர் மூலமாக துண்டு போட்டார். திருநாவும் டெல்லியில் முகாமிட்டு அரசியல் செய்தார்.
'நீங்கள் தள்ளி இருங்க மிஸ்டர்' எனக் கூறி அவரது கருத்தை புறக்கணித்துவிட்டார் ராகுல்காந்தி. இந்தநிலையில், தமிழக அரசியலில் தனித்து நிற்கும் கட்சிகயோடு புது அணியை உருவாக்கக் கிளம்பிவிட்டார் தினகரன்.
அந்தவகையில், பாமகவுடனும் தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களாக அன்புமணியோடு அமமுக பேசி வருகிறது.
இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசப் போகிறார்களாம். பாமக தலைமையில் தினகரனா...அமமுக தலைமையில் பாமகவா...விஜயகாந்த் யார் தலைமையை ஏற்பார் என யோசித்து யோசித்து முடிவுக்கு வராமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள் அமமுக தொண்டர்கள்.