தினகரனிடம் இருந்து தப்பி ஓடி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகை கொங்கு மண்டலத்தில் அக்கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் கரூர் சின்னச்சாமி உள்ளிட்டோர் செந்தில் பாலாஜி தனி ராஜ்ஜியம் நடத்த தொடங்கிவிடுவாரே என உதறலில் உள்ளனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இளவரசி குடும்பத்துடனான நெருக்கத்தால் கிடுகிடு வளர்ச்சி அடைந்தார் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா, சசிகலா பேசும் ரகசியங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜி காதுக்கு போகும் அளவுக்கு இளவரசி குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார்.
இதனால் ஒருகட்டத்தில் முதல்வராகிவிடுவோம் என கனவில் மிதந்தார். ஆனால் செந்தில் பாலாஜியை ஜெயலலிதா அடக்கி வைத்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தினகரன் கோஷ்டியில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி. அந்த அணியின் பெரும்பாலான செலவுகளை செந்தில் பாலாஜிதான் கவனித்து கொண்டார்.
தினகரன் தரப்பில் இருந்து ஒரு பைசாகூடா தரப்படவில்லை. இந்த விரக்தியில்தான் திமுகவுக்கு தாவிவிட்டார் செந்தில் பாலாஜி.
தற்போது கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி படுபிஸி... ஒரு மாவட்ட செயலாளர் கெத்துக்கு வலம் வருகிறார். இதனால் கரூர் சின்னச்சாமி, நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உதறலில் உள்ளனர்.
இதையறிந்த செந்தில் பாலாஜி, கரூர் சின்னச்சாமியுடன் ஒரு டீலிங் பேசியுள்ளார்.. அதாவது வரும் லோக்சபா தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்க.. உங்களை ஜெயிக்க வைக்கிறது என் பொறுப்பு.. நமக்கு பொது எதிரி தம்பிதுரை.. அவரை வீழ்த்திவிடுவோம்.. நீங்க டெல்லியை பாருங்க.. நான் லோக்கல் அரசியலை பார்க்கிறேன் என கூறியிருக்கிறார்.
இதற்கு சின்னச்சாமியும் ஓகே சொல்ல கரூர் திமுகவில் ஒரே உற்சாகமாம்!