மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதற்காக வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் சூழலியல் திருவிழா நடைபெற உள்ளது. கோவை கிருஷ்ணா கல்லூரியில் நடக்க இருக்கும் இத்திருவிழாவை 'ஓசை' என்ற சூழலியல் அமைப்பு நடத்த இருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதற்குப் பதில் தருகிறார் ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாசன். அவர் கூறியிருப்பதாவது:
எண்ணிலடங்கா காரணங்களுக்காக இம்மலை பாதுகாக்கப்பட வேண்டும். எனினும் மூன்று முக்கிய காரணங்கள் அவசிய தேவையாக கருதப்படுகிறது. இந்த மலைதான் மேகங்களை ஈர்த்து நமக்கு மழைப் பொழிவை தருகிறது. இந்த மலையின் தனித்துவமான இயற்கை அமைப்பு, பெய்யும் மழைநீரை தேக்கி வைத்து ஆண்டு முழுவதும் ஓடும் ஓடைகளையும் சிற்றாறுகளையும் உருவாக்குகிறது. அவையே கடும் கோடையிலும் நமது ஆறுகளில் நீரோட்டத்தைத் தருகின்றன. தென்னிந்தியாவின் குடிநீர், வேளாண்மை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்கு தேவையான தண்ணீரை தரும் அனைத்து ஆறுகளும் இந்த மலையில்தான் உருவாகின்றன.
இந்த மலை உலகிலுள்ள எட்டு அரிதிலும் அரிதான பல்லுயிரிய செழுமைமிக்க இடங்களில் ஒன்றாக அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக இங்குள்ள 4500 வகை தாவரங்களில் 1700 வகை உலகில் வேறெங்கும் இல்லை. இங்குள்ள சுமார் 641 வகை மர வகைகளில் 360 வகை மரங்கள் இங்கு மட்டுமே உள்ளன. உலகில் அதிக எண்ணிக்கையில் புலிகளும் ஆசிய யானைகளும் இங்குதான் வாழ்கின்றன. இந்தப் பட்டியல் நீளமானது. இத்தகைய அரிய இயற்கை அமைப்பு நம்மிடம் உள்ளது என்பது பெருமிதத்திற்குரியது. அதனை காப்பாற்றுவது நமது தலையாய கடமை.
உலக வெப்பமயமாதலும் அதன் விளைவாக பருவநிலை மாறுதலும் புவிக்கோளத்தின் உயிர் வாழ்வை மாபெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில் நமது பூமி, மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் என ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற அறிவியல் மேதைகள் எச்சரித்துள்ளனர். ' வளர்ச்சி ' என்ற பெயரில் நாம் உமிழ்ந்த கரி அமில வாயு உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதுதான் இதற்குக் காரணம்.
இதனை தடுக்க அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியமாகும். அதேபோல் உமிழ்ந்த கரிவாயுவை கட்டுப்படுத்த பூமியின் பசுமைப் பரப்பும் அதிகரிக்க வேண்டும். அப்படியானால் பெரும் பரப்பில் இயற்கை காடுகளைக் கொண்ட நமது மேற்கு மலை இந்த பூமியின் உயிர்ப்பை காப்பாற்ற எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். எனவே மேற்கு மலையை பாதுகாப்பது என்பது இன்னும் பிறக்காத நம் தலைமுறை வாழ இப்புவிக் கோலத்தை பாதுகாப்பது ஆகும்'.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.