மதுரை ஆவின் சேர்மனாக ஓ.பி.எஸ்.தம்பி ஓ.ராஜா பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் மதுரை அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பி.எஸ்.சின் தம்பி ஓ.ராஜா மதுரை ஆவின் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டதில் இருந்தே மதுரை அதிமுகவில் சர்ச்சைகள் வெடித்தது. கட்சியினரின் விருப்பத்திற்கு மாறாக அதிகார துஷ்பிரயோகம் செய்து தலைவர் பதவியை ஓ . ராஜா கைப்பற்றியதாக அதிமுகவினர் குமுறவே கடந்த 19-ந் தேதி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே அதிமுக மேலிடம் நீக்கியது.
ஆனால் நீக்கப்பட்ட 5 நாட்களில் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார் ஓ .ராஜா. அவர் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டதை மதுரை அதிமுக முக்கியப் புள்ளிகள் ரசிக்கவில்லை.
இந்நிலையில் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட உற்சாகத்தில் சூட்டோடு சூடாக மதுரை ஆவின் அலுவலகத்தில் சேர்மனாக ஓ. ராஜா இன்று காலை பதவியேற்றார். ஆனால் மதுரை அ.தி.மு.க நிர்வாகிகள் பெரும்பான்மையினர் இந்நிகழ்ச்சியை புறக்கணித்து ஓ.ராஜாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
கடந்த 19-ந் தேதி சேர்மனாக ஓ . ராஜா தேர்வான போது உள்ளுக்குள் புகைச்சலுடன் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட பலரும் இந்த பதவியேற்பில் தலை காட்டாதது ஓ . ராஜாவை மீண்டும் கட்சியில் சேர்த்ததை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. எனவே மதுரை அ.தி.மு.க.வில் மீண்டும் உட்கட்சிப்பூசல் எந்த நேரத்திலும் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.