அ.ம.மு.க வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா இன்று மாலை கரூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி மு க வில் இணைந்தனர். அனைவரையும் வரவேற்று மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது, மோடியையும், எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்து விட்டது. தமிழகத்து கிரிமினல் ஆட்சியை காப்பாற்றும் மோடிக்கு வரும் தேர்தலில் தமிழகம் தக்க பாடம் கற்பிக்கும் என மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.
இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். பிரமாண்டமாக நடைபெற்ற இணைப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டதால் கரூர் நகரமே ஸ்தம்பித்தது.