ஜெயலலிதா மரணம் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே விசாரணைக்கு ஆஜராகும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இதுதொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதில், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் முதல் அப்போல்லோ மருத்துவர்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 150 பேரிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகுமாறு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகமாகி விசாரணை ஆணையம் உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, சம்மன் அனுப்பியும் ஆஜராகாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜனவரி 8ம் தேதி ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரும் ஜனவரி மாதம் 11ம் தேதியும் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.