ரூ100 கோடியை ஆட்டைய போட்ட இளவரசி குடும்பம் - செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியதன் பின்னணி இதுதான்!

This is background of Senthil Balaji jumped to DMK

Dec 28, 2018, 14:43 PM IST

திமுகவில் தனது ஆதரவாளர்களையும் இணைத்து கரூரில் கெத்து காட்டியிருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த இணைப்புக்குப் பின்னணியில் பல நூறு கோடி ரூபாய்கள் அடங்கியிருப்பதாகச் சொல்கின்றனர் மன்னார்குடி குடும்ப கோஷ்டிகள்.

அமமுகவின் மாநில அமைப்புச் செயலாளர், கரூர் மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் என 3 பதவிகளில் இருந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, அத்தனை பதவிகளையும் உதறவிட்டு திமுகவில் இணைந்தார். இதற்குப் பதில் சொன்ன தினகரன், முலாம் பூசப்பட்ட போலிகள் செல்வதால் எந்தவித நஷ்டமும் இல்லை எனக் கூறியிருந்தார்.

அமமுக தொடங்கியதில் இருந்து கரூர் மாவட்டத்தில் நடந்த 3 உண்ணாவிரதப் போராட்டங்கள் உட்பட அனைத்துக்கும் செந்தில்பாலாஜியே சொந்தக் காசை செலவு செய்துவந்துள்ளார். இதற்காக மேடை அமைப்பு, நாற்காலி, சவுண்ட் சர்வீஸ் ஆகியவற்றுக்கு என பல கோடி ரூபாய்களைக் கடனாக வைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

இதைப் பற்றித் தெரிந்திருந்தும் பொருளாதாரரீதியாக எந்த உதவியையும் தினகரன் செய்யவில்லை. இவற்றின் காரணமாகவே அமமுகவை விட்டு விலகும் முடிவை எடுத்தார் என்றுதான் வெளிஉலகில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், இளவரசி குடும்பத்துடன் ஏற்பட்ட பணப் பஞ்சாயத்து காரணமாக இந்த முடிவை அவர் எடுத்தார் என்கின்றனர் அமமுக வட்டாரத்தில். இதைப் பற்றிப் பேசும் அக்கட்சி பொறுப்பாளர்கள், இளவரசி பரோலில் வந்துவிட்டுப் போன பிறகுதான் செந்தில்பாலாஜி முடிவில் மாற்றம் ஏற்பட்டது.

இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியாவோடு நல்ல நட்பில் இருந்தார் செந்தில் பாலாஜி. இதன் காரணமாக அவர்களுக்குள் கொடுக்கல், வாங்கல்களும் நடந்துள்ளன.

அமைச்சராக இருந்த காலத்திலும் அதன்பிறகும் பல்வேறு வகைகளில் பெரும் தொகை ஒன்றை இளவரசி தரப்பிடம் கொடுத்து வைத்திருந்தார். அந்தப் பணம் வெளியில் வராமல் முடங்கிவிடவே, அதைப் பெறுவதற்குப் பல வகைகளில் முயற்சி செய்தார்.

ஒருகட்டத்தில், டிடிவியிடம் பேசிய செந்தில் பாலாஜி, என்னுடைய பணத்தை வாங்கித் தர நீங்கள்தான் உதவ வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அவரோ, சின்னம்மாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் எனக் கூறியவர், வேறு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இளவரசி பரோலில் வந்தபோது இதைப் பற்றிக் கேட்பதற்கு முயற்சி செய்தார் செந்தில் பாலாஜி. அவருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

குடும்ப பஞ்சாயத்து அதிகமானதால், இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை என முடிவெடுத்து திமுகவில் சேர்ந்தார்.

தம்பிதுரை உள்ளிட்டவர்களைப் பழிவாங்கவும் எம்.பி வேட்பாளராகப் போட்டியிடவும் கிடைத்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் செந்தில் பாலாஜி. திமுகவுக்கு அவர் போனதைப் பற்றிப் பேசிய சசிகலா கோஷ்டிகளும், ' குடும்ப பஞ்சாயத்துதான் செந்தில் பாலாஜி மனதை மாற்றியது. அவர் இழந்த தொகையைத் திரும்பப் பெறுவதற்கு தினகரன் உதவி செய்யவில்லை' எனப் பேசி வருகின்றனர். திமுக முகாமில் இருந்து கொண்டு ஆட்டத்தைக் காட்ட இருக்கிறார் அவர்' என்கின்றனர். இதில் ஹைலைட்டான விஷயம், இளவரசி தரப்பிடம் செந்தில் பாலாஜி இழந்த தொகை 100 கோடிக்கும் மேலாம்.

-அருள் திலீபன்

You'r reading ரூ100 கோடியை ஆட்டைய போட்ட இளவரசி குடும்பம் - செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியதன் பின்னணி இதுதான்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை