ஸ்டாலின் செல்லும் காரில் எப்போதும் தொற்றிக் கொள்ளும் விழுப்புரம் பொன்முடி, கடும் மனஉளைச்சலில் இருக்கிறாராம். எ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் குடும்பம் கொடுக்கும் பூரண கும்ப மரியாதைதான், பொன்முடி அதிருப்திக்குக் காரணம் என்கிறார்கள்.
முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடி, ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர். தி.க தலைவர் வீரமணி மூலமாக கட்சிக்குள் கால் வைத்தாலும், அவருக்கும் பெரியாரிய கொள்கைளுக்கும் எந்தவித சம்பந்தமும் இருந்ததில்லை.
கடந்த திமுக ஆட்சிகாலத்தில் கல்வித்துறையிலும் ஆட்சியிலும் கோலோச்சினார். கடந்த சில மாதங்களாக ஸ்டாலினை முன்னிறுத்தும் பிராண்டிங் டீமுக்கும் பொன்முடிக்கும் இடையில் சரியான உறவு இல்லாமல் போய்விட்டது.
பிராண்டிங் டீமின் குட்புக்கில் எ.வ.வேலு இருப்பதால், அவரையே விழுப்புரம் மாவட்ட நிகழ்ச்சிகளில் முன்னிறுத்தத் தொடங்கிவிட்டாராம் ஸ்டாலின்.
இதைப் பற்றிக் கூறும் திமுக பொறுப்பாளர்கள், பொன்முடி இல்லாமல் விழுப்புரத்தில் எந்த அணுவும் அசையாது.
ஆனால் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார் பொன்முடி. இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகிறார் வேலு. இதனால் கட்சிக்காரர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கட்சி நிகழ்ச்சி, அண்ணா அறிவாலய நிகழ்ச்சி என அனைத்திலும் வேலுவின் தலையே தென்படுகிறது. சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிகளில்கூட பொன்முடி தலைகாட்டவில்லை. டிசம்பர் 24ம் தேதி நடந்த திமுக தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் பொன்முடி புறக்கணித்துவிட்டார்.
விழுப்புரம் மாவட்ட நிகழ்ச்சிகளுக்கு ஸ்டாலின் அப்பாயிண்மென்டை எ.வ.வேலுதான் பெற்றுத் தருகிறார். இதனால் மாவட்டத்துக்கு நான் எதுக்கு என்ற கோபம் பொன்முடிக்கு ஏற்பட்டுவிட்டது.
துர்கா, உதயநிதி ஸ்டாலின் உள்பட தலைவரின் குடும்பத்தாரும் வேலு சொல்வதைத்தான் கேட்கிறார்கள். முரசொலி அறக்கட்டளை உள்பட சில நிர்வாகங்களையும் அவர்தான் கவனித்து வருகிறார்.
தினமும் பத்து மாவட்ட செயலாளர்கள் வரையில் வேலுவின் வீட்டில் முகாமிடுகின்றனர். கட்சியின் நிழல் தலைவராக வேலு தான் செயல்படுகிறார். இந்த ஆட்டத்தைக் கட்சிக்காரர்கள் புகைச்சலுடன் பார்க்கின்றனர். 'பாக்கியராஜ் கட்சியில் எல்லாம் மாவட்ட செயலாளராக இருந்தவர், நம்மை ஆட்டுவிப்பதா' என அவர்கள் கோபம் கொள்கின்றனர். இந்தக் கோபத்தை ஸ்டாலினிடம் வெளிக்காட்டுவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். அப்படியே சொன்னாலும் கட்சியில் இருந்து கட்டம் கட்டிவிடுவார்கள் எனப் பயப்படுகின்றனர். அந்தளவுக்கு வேலுவின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது' என்கின்றனர்.
-அருள் திலீபன்