ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் சாட்சிகளின் வாக்குமூலம் தப்பும் தவறுமாக டைப் செய்யப்படுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் புகார் செய்துள்ளது.
மருத்துவ வார்த்தைகள் மாறுவதால் அர்த்தமே மாறிவிடுகிறது. எனவே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆராய சர்வதேச அளவில் புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் குழுவை நியமிக்க அப்போலோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள மருத்துவர்களின் வாக்குமூலம் டைப் செய்யப்பட்டதில் பல தவறுகள் உள்ளது. உதாரணத்திற்கு 'இன்டு பேசன்'என்ற வார்த்தை 'இன்குபேசன்' எனவும், 'என்டிரோ காக்கஸ் பாக்டீரியா' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'என்டோ கார்டிடிஸ் பாக்டீரியா' என்றும் டைப் செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற பல வார்த்தைகள் தவறுதலாக டைப் செய்யப்படுவதால் அர்த்தமே மாறி, விசாரணையில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். ஏற்கனவே ஆணையத்திற்கு உதவியாக 4 பேர் கொண்ட டாக்டர் குழுவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தும் அந்தக் குழு இதுவரை ஆணையத்தால் நியமிக்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்து முழுமையாக ஆராய சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைப்பதே உகந்தது என அப்போலோ நிர்வாகம் தெரிவித்தள்ளது.