திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் பொதுச் செயலாளரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய தோழருமானவர் பேராசிரியர் க.அன்பழகன் (96). வயது முதிர்வு மற்றும் உடல் ஓத்துழைக்காததால் கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்க முடியாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், க.அன்பழகனுக்கு திடீரென நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை உடனடியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், எம்.பி கனிமொழி ஆகியோர் மருத்துவனைக்கு விரைந்து க.அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
அப்போது, சளித்தொல்லை அதிகமாக இருப்பதால் அவர் மூச்சுவிட சிரமப்படுகிறார் என்றும் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நெஞ்சில் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்டு வருகிறார். குழாய் மூலம் சளிவெளியே எடுக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் உடல்நலத்தோடு வீடு திரும்புவார்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.