ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது.
போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இருவரும் தனி மேடையில் அமர்ந்து போட்டியை ரசித்தனர்.
போட்டியின் இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, “ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். இந்த விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை. காளைகளை குழந்தைகள் போன்று அதன் உரிமையாளர்கள் வளர்க்கிறார்கள். இந்த வீர விளையாட்டு உலகமே போற்றும் அளவுக்கு சிறக்க வேண்டும்” என்றார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தடைகளை உடைத்து சட்டப் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும்” என்றார்.