உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

by Isaivaani, Jan 16, 2018, 09:16 AM IST

மதுரை: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது.

பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது.

இதற்கிடையே, வாடிவாசலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்தார். அதில், “ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறிவரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்யமாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழி ஏற்கிறோம்” என முதல்வர் உடன் துணை முதல்வர், அமைச்சர்களும், மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

இதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாடிவாசலில் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள் பங்கேற்கின்றன. 1241 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்படுகின்றன.

You'r reading உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை