N.V.சங்கரன் எனும் ஞாநி சங்கரன். இவரது அப்பா வேம்புசாமி சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். ஞாநி அவரது ஜீனில் உருவந்தவர் என்பதால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஞாநி, செங்கல்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.
கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தார். அந்த சமயம், 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின்அணிக்கு ஆதரவாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார். இண்டியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74).
பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).
சமூக விமர்சன நோக்குள்ள வீதி நாடகங்களும் மேடை நாடகங்களும் நடத்தி வந்தார். பரீக்ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதாவுக்கு அடுத்து, இணைய தளத்தைப் பயன்படுத்தி, தட்டச்சு செய்யத் துவங்கிய இரண்டாவது நபர் ஞாநி ஆவார்.
எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை,
பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு எளித மக்கள் கட்சி சார்பாக, ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அன்மை காலங்களில் சமகால அரசியல் குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்கள் வாயிலாக துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்தார்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து கலை, இலக்கியம், வாழ்வியல், குறும்படங்கள், நெடுந்தொடர்கள் என பல துறை படைப்புகளுடன் செயல்படப்போவதாக,
"ஓ பக்கங்கள்" என்ற பெயரில் யூ ட்யூப் சேனல் ஒன்றை இந்த வருடத்தின் முதல் நாளில் (ஜனவரி-1) தொடங்கினார்.
ரஜினியின் ஆரம்ப அரசியல் என்பது தான் என்ன.? என்ற தலைப்பில் தனது முதல் வீடியோவை ஜனவரி 1, இரவு 9 மணிக்கு வெளியிட இருப்பதாக முன்னறிவிப்பு வெளியிட்டு, பின்னர், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறோம் என, இரவு 10.25 மணிக்கு வெளியிட்டு, ரஜினியின் அரசியல் கால தாமத்திற்கு சிறியதாக ஒரு குட்டு வைத்தார்.
அந்த வீடியோவில் ரஜினியின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்தார்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்ட நேரத்தில், நீதித்துறை ஆளுக்கொரு நீதி வழங்குவது பற்றியும் போராடும் ஊழியர்களின் உணர்வு குறித்தும் சமூக அக்கறையும் அடுத்த வீடியோ வெளியிட்டார்.
கடைசியாக தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்தும், மாற்று அரசியல் குறித்தும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
"ஓ பக்கங்கள்" தொடங்கி இரண்டு வாரங்களில் மூன்று தலைப்புகளில் வீடியோ வெளியிட்ட நிலையில், தனது அரசியல் விமர்சன வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
பேஸ்புக்கில் ஞாநி...
"2016டன் ஒப்பிடும்போது எனக்கு 2017 மேலான வருடம்.உடல் உபாதைகள் குறைந்திருந்தன. 2018 இன்னும் மேலானதாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்"
என, பல எதிர்பார்ப்புகளுடன் 2018-வது ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்தார்,
"எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமேனும் உலகம் சற்றேனும் திருந்தும் என்று நம்பி உழைப்போம்" எனவும்,
"மது இல்லாமல் மகிழ்ச்சி கொள்ளப் பழகுங்கள். வாழ்க்கையில் எல்லாமே பழக்கத்தில் வருவதுதான்"
எனவும் மதுவுக்கு எதுராக தனது புத்தாண்டு வாழ்த்துக்களை அறிவுரையாக தெரிவித்தார்.
ஜனவரி 4 அவரது பிறந்த நாள், 65-ல் தனது ஆயுள் முடியப்போவதை அறியாமல்,
"64 வயது முடிகிறது. நாளை 65 ஆரம்பம்" என பதிவிட்டு, தனது 65-ஐ உற்சாகமாக தொடங்கினார்,
மானிய விலையில் மகளிருக்கு ஸ்கூட்டி, விலையில்லா மிக்சி, கிரைண்டர் திட்டமெல்லாம், போக்கு வரத்து ஊழியர்களின் வைப்பு நிதி ஓய்வூதியத்திலிருந்து அரசு கொள்ளையடித்த 7000 கோடியில்தான் தரப்படுகின்றன என்பது எவ்வளவு பெரிய அவமானம். திருடனிடம் பிச்சை எடுப்பது என்று ஆர்.கே.நகருக்கு கமல்ஹாசன் சொன்னது தமிழ்நாட்டுக்கே பொருந்துகிறது. அரசு நினைத்தால் ஆறு மாத டாஸ்மாக் வருவாயைக் கொண்டு ஊழியர்களிடம் திருடிய பணத்தைத் திருப்பிவிடலாம் என, அதிமுக அரசுக்கு எதிராக தனது குரலை பதிவு செய்தார்,
ஆண்டாள்- வைரமுத்து பிரச்சனையில் வைரமுத்துக்காக தனது ஆதரவை தெரிவித்தார்,
"நான் வைரமுத்து அபிமானி அல்ல. எனினும் ஆண்டாள் பற்றிய வேறொருவர் ஆய்வை அவர் சுட்டிக் காட்டியதில் எந்த தவறும் இல்லை என்பதே என் கருத்து. இதனால் ஆண்டாளுக்கு இழிவு என்பதெல்லாம் பம்மாத்து. வைரமுத்து வருத்தம் தெரிவிக்க அவசியமே இல்லை. தினமணி கட்டுரையை நீக்கியது தவறு. அற்பத்தனமாக நடந்து கொள்ளும் ஹெச். ராஜா வகையறாக்களுக்கு பயந்து நடுங்குவது அர்த்தமற்றது" என தனது நிலைபாட்டை பதிவு செய்தார்.
கடைசியாக அவர் தனது பக்கத்தில், ஆடிட்டர் குருமூர்த்தியின் வெளிப்படையான பிஜேபி ஆதரவு நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்,
"துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும் என, விமர்சித்துள்ளார்.
எம்மாதிரியான பின்விளைவுகள் வரும் என்பதையெல்லாம் யோசிக்காமல், தன் மனிதில் சரியென படுவதை தைரியமாக வெளிப்படுத்தும் அரிதிலும் அரிதான அரசியல் விமர்சகர்களில் ஒருவரான ஞாநி போன்றவர்கள் நம்மை விட்டு கடந்துபோவது, சமூக சிந்தனை கொண்ட வளரும் புதிய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு கடும் பின்னடைவாகும்.