சாத்துரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரத்தம் தானமாக வழங்கிய கமுதியைச் சேர்ந்த இளைஞர், மன உளைச்சலில் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை ரத்தக் கசிவு ஏற்பட்டு அந்த இளைஞர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இளைஞர் குடித்த எலி மருந்து வீரியத்தால் திடீர் என ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்து விட்டதாக டீன் சண்முகசுந்தரம் தெரிவித்தார். ஆனால் இளைஞரின் உறவினர்களோ உரிய சிகிச்சை வழங்காமல் சாகடித்து விட்டதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
சடலத்தையும் வாங்க மறுத்து விட்டனர் . பிரேதப் பரிசோதனையை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவர்களைக் கொண்டு நடத்த வேண்டும். அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்டவில்லை.