திருச்சி பெல் வளாகத்தில் புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற கோயில்கள் வளாகத்தில் இருப்பது போல் சிலை வைத்த இடத்தில் புத்தர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என புத்த மதத்திற்கு மாறிய தொழிலாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெல் வளாகத்தில் சக்தி கோயில் அருகே நேற்று காலை மூன்றரை அடி உயர கல்லாலான புத்தரின் சிலை திடீரென வைக்கப்பட்டது. இதனை பெல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வைத்தனர்.
இந்த சங்கத்தின் ஊழியர்களில் 50 பேர் புத்த மாதத்திற்கு மாறியவர்கள். பெல் வளாகத்தில் மற்ற வழிபாட்டு தலங்கள் உள்ளது போல் புத்தருக்கு கோயில் கட்ட இடம் ஒதுக்குமாறு பெல் நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
அனுமதி கொடுக்க மறுத்ததால் மகாபோதி புத்த சங்கம் ஆதரவுடன் புத்தர் சிலையை வைத்து விட்டனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
புத்தர் சிலையை வைத்த தொழிலாளர்கள் தரப்பினர் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் சிலை அகற்றப்படலாம் என்ற தகவலால் தொழிலாளர்களும் விடிய விடிய காத்திருந்ததால் பெல் வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே பெல் வளாகத்திற்குள் எந்த கோயில்களும் கட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் இதுவரை வழங்கியதில்லை. தற்போது வளாகத்திற்குள் உள்ள சில கோயில்கள் பெல் வருவதற்கு முன்பே இருந்தவை. மற்ற கோயில்கள் வளாகத்தை ஒட்டிய உள்ளாட்சி எல்கைகளில் அமைந்துள்ளன என பெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே முத்தரப்பு பேச்சில் புத்தர் சிலை அகற்றப்படுமா?அல்லது கோயில் கட்ட அனுமதி கிடைக்குமா? என்ற வாதங்களால் பெல் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.